Tuesday, May 28, 2024
Home » “நான் உங்களை மன்னிப்பதுபோல் நீங்களும் பிறரை மன்னியுங்கள்”

“நான் உங்களை மன்னிப்பதுபோல் நீங்களும் பிறரை மன்னியுங்கள்”

by sachintha
April 9, 2024 6:38 am 0 comment

இறை இரக்கப் பெருவிழா

உயிர்ப்பு விழாவை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையைத் தமது இரக்கத்தின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென இயேசு விரும்புகிறார்.

“அந்நாளில் எனது ஆழ்ந்த இரக்கத்தை அனைவரும் அடைவர். எனது இரக்கத்தின் ஊற்றை அண்டிவரும் ஆன்மாக்கள் மீது எனது அருட்பெருக்கை கடல்மடை போல் திறந்து விடுவேன். அந்நாளில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெறுவோர் தமது பாவங்களிலும் அவற்றுக்குரிய தண்டனை அனைத்திலிருந்தும் நீக்கம் பெறுவர்.” என இயேசு தெரிவித்துள்ளார்.

உலகத்தின் தொடக்கம் முதலே இறைவன் மக்கள் மீது தாம் கொண்டுள்ள இரக்கத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். பழைய ஏற்பாட்டு வரலாற்று நிகழ்ச்சிகள் மூலமும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துநாதர் மூலமும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகின்றது.

ஆண்டவரை அன்புசெய்கிறவர்களுக்கு அவரது இரக்கம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதென்று தேவதாய் தமது கீதத்தில் கூறுகின்றார்.

சமீப காலத்தில் பாவிகளுக்குத் தமது நித்திய அன்பின் புதுத் தன்மைகளை அறிவித்து இறைஇரக்கத்தின் பக்தியை ஏற்படுத்த ஆண்டவர் பல அடியார்களுக்கு காட்சி தந்துள்ளார்.

இந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் சகோதரி தெரேசாள்( இறப்பு 1897) சகோதரி பெனினா கோண்சொலாட்டா ( இறப்பு 1916) சகோதரி சோபிய மென்டஸ் ( இறப்பு 1923) சகோதரி மரிய பவுஸ்தீனா கோவல்ஸ்கா (இறப்பு 1938) சகோதரி பெத்ரோன் (இறப்பு 1946) ஆகியோராவர். இறை இரக்கத்தின் பக்தியைப் பரப்பும் பணி சகோதரி பவுஸ்தீனாவிடம் ஒப்டைக்கப்பட்டது. ​

இரக்கத்தின் அரசரான இயேசு இவருக்குப் பலமுறை காட்சி தந்தார். இக் காட்சிகள் 1930லிருந்து 1938 வரை நீடித்தன. இறை இரக்கத்தின் பக்தி குறித்து இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினார். தமது வார்த்தைகளை பவுஸ்தீனாவின் கையேட்டில் எழுதிக்கொள்ளுமாறு பணித்தார்.

அவரது 600 பக்கங்களை கொண்ட நாட்குறிப்பிலிருந்தே இக் காட்சிகள் பற்றிய பல தகவல்களை அறியக் கூடியதாய் உள்ளது. ஏனெனில் தமது ஆன்ம குருவையும் மடத் தலைவியையும் தவிர வேறொருவருக்கும் அவர் காட்சிகள் பற்றிய செய்தியை அறிவிக்கவில்லை.

சகோதரி மரிய பவுஸ்தீனா சயரோக நோயால் பாதிக்கப்பட்டு மிகத் துன்புற்றார். தன்னுடைய துன்பங்களை பாவிகளுக்காக ஒப்புக்கொடுத்தார். தமது 33ஆம் வயதில் கிராக்கோ எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் இறைவனடி சேர்ந்தார் 1993 ஏப்ரல் 18ஆம் திகதி திருத்தந்தை 2 ஆம் ஜோன் பவுல் முத்திப்பேறுபெற்றவரோக அறிவித்தார். பின்னர் 2000 ஆண்டு ஏப்ரல் 30 திகதி திருத்தைந்தை மரிய பவுஸ்தினாவை “புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா” வாக அறிவித்தார்.

கடவுள் எல்லாரையும் அன்புசெய்கிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிடமுடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது கடவுளின் அளவிடமுடியாத இரக்கம் நம்மீது பாய்ந்தோடி வரும்.

“பாவியின் சீர்கேடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது. ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வைக்க எல்லா ஆன்மாக்களுக்கும் அழைப்பு விடு, எனெனில் எல்லாரையும் மீட்க நான் விரும்புகிறேன். எல்லா ஆன்மாக்களுக்காகவும் சிலுவை மரத்தில் என் இதயம் ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டுள்ளது. எனது இரக்கத்தின் ஊற்று. நான் யாரையும் ஒதுக்கி விடுவதில்லை. என் இரக்கத்தை நீங்கள் பெற்றது போல் நீங்களும் பிறருடன் இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

நான் மன்னிப்பதுபோல் பிறர் குற்றங்களை நீங்களும் மன்னியுங்கள். பாவத்தில் வீழ்ந்துகிடக்கும் ஆன்மாக்களை இரக்கமுள்ள என் இதயத்தருகே வரும்படி சொல். நான் அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித்தருவேன்” என்றும் யேசு கூறியுள்ளார்.

இறை இரக்கமுள்ள இயேசுவின் படம்:

1931ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி சகோதரி பவுஸ்தீனாவிற்கு இயேசு காட்சி அளித்தபோது அவர் வெண்ணாடை அணிந்தவராகத் தோன்றினார். ஒருகரம் மார்பைத் தொட்டபடியும் மறுகரம் ஆசீரளிக்கும் பாவனையாகவும் இருந்தன. அவரது இதயத்திலிருந்து சிவப்பும் வெண்மையுமான இரு ஒளிக்கதிர்கள் வீசின. இந்த தோற்றத்தைப் படமாக வரையும் படியும் அதற்கடியில் “இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்” என்னும் சொற்களை எழுதும்படியும் இயேசு அவருக்குக் கூறினார்.

அந்த இரு ஒளிக்கதிர்களுக்கு விளக்கம் கேட்டபோது அவை தமது இதயத்திலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தையும் தண்ணீரையும் குறிக்கின்றன என்றும் வெண்கதிர் ஆன்மாவைத் தூய்மைப் படுத்தும் தண்ணீருக்கும், செங்கதிர் ஆன்மாவின் உயிரான அருளுக்கும் அடையாளமாக இருக்கின்றன என்றும் விளக்கிய இயேசு,

“இந்தக் கதிர்கள் எனது தந்தையின் கோபத்திலிருந்து ஆன்மாவைப் பாதுகாக்கின்றன. இதன் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறு பெற்றவன் ஏனெனில் இறைவனின் நீதிக்கரம் அவனை ஒருபோதும் தீண்டாது” என்று கூறினார்.

சகோதரி பவுஸ்தீனாவின் வர்ணனைக்கமைய ஒரு நல்ல ஓவியரைக் கொண்டு இப்படம் வரையப்பட்டது. இயேசு கேட்டுக்கொண்டபடியே அப்படம் கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது.

எல்.எஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT