நேற்றைய (08) IPL போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியில் நாணயச்சுழற்சியில் CSK அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனராக களமிறங்கிய பிலிப் சால்ட் முதல் பந்திலேயே அவுட்டானது கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. முதல் ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 1 ஓட்டம் சேர்த்திருந்தது கொல்கத்தா.
சுனில் நரைன் – அங்கிரிஷ் ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் ப்ளே வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரேயஸ் ஐயர் – ரிங்கு சிங் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை ஏற்ற முயற்சித்தனர். ரிங்கு சிங் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த ரஸல் 10 ஓட்டங்களில் கிளம்பினார்.
கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரும் 34 ஓட்டங்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் ஸ்டார்க் டக் அவுட்டான நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 137 ஓட்டங்களை சேர்த்தது.
137 ஓட்டங்கள் என்ற இலக்குடன் அடுத்ததாக களமிறங்கிய CSK அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் 8 பந்துகளில் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார் ரச்சின் ரவீந்திரா.
அடுத்து களமிறங்கிய டேரில் மிட்சல் 12வது ஓவர் வரை தாக்குப் பிடித்து 25 ஓட்டங்களை எடுத்தார். சுனில் நரைன் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார் மிட்சல்.
இந்த போட்டியில் கேப்டன் ருதுராஜ் – சிவம் துபே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 13ஆவது ஓவரின் முடிவும் ருதுராஜ் 53 ஓட்டங்களை குவித்திருந்தார். சிவம் துபே 1 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம் 28 ஓட்டங்களை சேர்த்தார். 16வது ஓவரில் வைபவ் வீசிய பந்தில் சிவம் துபே அவுட் ஆனார்.
அடுத்தததாக அரங்கமே அதிரும் வகையில் களமிறங்கிய தோனி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 3 பந்துகளில் ஒரே ஒரு ஓட்டம் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆட்டத்தின் முடிவில் ருதுராஜ் கெய்க்வாட் 67 ஓட்டங்களை (9 பவுண்டரிகள்) குவித்திருந்தார். 17 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.