Home » பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் இன்று

பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் இன்று

by Prashahini
April 8, 2024 9:09 am 0 comment

இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் இன்று (08) வட அமெரிக்கா முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் இது ஒரு அரிதான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் சுமார் 7 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடிக்கும் இந்த சூரிய கிரகணத்தை போல் இன்னொரு சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை பசிபிக் பகுதியில் மீண்டும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதனால் இது சிறப்பான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.

வட அமெரிக்கா முழுவதும், நிகழவுள்ள இந்தக் கிரகணமானது, மசாட்லான், டோரியன், மெக்சிகோ சென், அன்டோனியோ, ஒஸ்டின் மற்றும் டல்லாஸ், டெக்சாஸ், லிட்டில் ராக், ஒர்கன்சாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட், ஓஹியோ, ரோசெஸ்டர், நியூயோர்க், பெர்லிங்டன், வெர்மான்ட், மாண்ட்ரீல் மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

தவிரவும் சூரிய கிரகணத்தின்போது, சந்திரனின் நிழலானது நியூயோர்க் மாநிலம் முழுவதும் மணிக்கு சராசரியாக 2,300 மைல் வேகத்தில் பயணிக்கும் என்றும் மாநிலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் செல்வதற்கு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் என்று ரோசெஸ்டர் மியூசியம் & அறிவியல் மையத்தின் கிரகண கூட்டாண்மை ஒருங்கிணைப்பாளர் டான் ஷ்னீடர்மான் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த கிரகணத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.37 மணிக்கு (அமெரிக்க நேரம் மதியம் 2:07 மணி), சந்திரன் சூரியனுக்கு முன்னால் நகரத் தொடங்கும், பின்னர் நள்ளிரவு 12.50 மணிக்கு (அமெரிக்க நேரம் பிற்பகல் 3:20 மணி) கிரகணம் ஆரம்பமாகி அதன் இறுதி 3 நிமிடங்கள் மற்றும் 38 வினாடிகளுக்கு அதிக இருள் நீடித்து (நீங்கள் நிற்கும் இடத்தைப் பொறுத்து சில வினாடிகள் கூடிக் குறைய வாய்ப்புண்டு) அதிகாலை 02.03 மணிக்கு (அமெரிக்க நேரம் மாலை 4:33 மணிக்குள்). சந்திரன் சூரியனைக் கடந்து ஒளியை இயல்பு நிலைக்குத் திருப்பும் என்று கூறப்படுகிறது.

இந்த கிரகண நேரத்திலே சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சரியாக இருக்கும், சூரிய ஒளியை மறைத்து இருளாக்கும், இதன் போது சந்திரனின் நிழல் வட அமெரிக்கா முழுவதும் தென்மேற்கில் இருந்து வடகிழக்கு வரை இரண்டு மணிநேரம் வரை வெட்டிச்செல்லும், இந்த வேளையிலே இந்தப் பாதையில் உள்ள இடங்கள் இருளில் மூழ்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 223,000 மைல்கள் தொலைவில் காணப்படும், இவ்வாறு சந்திரன் பூமிக்கு அருகாமையில் காணப்படுவதன் காரணத்தால் சந்திரன் வானில் சற்று பெரியதாக தோன்றும், இதன் விளைவாக சூரிய கிரகணத்தின் இருள் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பூமியும் சந்திரனும் நாளை சூரியனிலிருந்து 93 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும், ஒரு நெருக்கமான சந்திரன் அதிக தொலைதூர சூரியனுடன் இணைந்தால், ஆகக்குறைந்தது 7 நிமிடங்கள் வரை கிரகணம் நீடிக்கும். இதற்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்த கிரகணத்தை உலகம் கண்டது இதற்கு பின்னர் பசுபிக் பகுதியில் 2150 ஆண்டு வரை இவ்வாறு ஒரு கிரகணம் மீண்டும் நடக்காது என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்க்க தவறவிட வேண்டாம் என்றும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து சூரிய கிரகணத்தை பார்வையிடுமாறும் அனைவரைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம்.

சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, ​​அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம்.

சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது. ஏனெனில், இந்த நிகழ்வை இலட்சக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வில், டெக்சாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் உள்ள 20 விலங்குகளின் நடத்தை ஆய்வு செய்யப்படும்.

நாசாவின் எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் (Eclipse Soundscapes) திட்டமும் விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

கிரகணத்தின் காரணமாக ஏற்படும் முழு இருளில் விலங்குகளின் சத்தம் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்ய மைக்ரோஃபோன் போன்ற சிறிய உபகரணங்களை பொருத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும்.

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் தளத்தில் இருந்து கிரகணப் பகுதியில் இருந்து மூன்று ஆராய்ச்சி ராக்கெட்டுகள் ஏவப்படும்.

எம்ப்ரி ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோஹ் பர்ஜாத்யா இந்தப் பரிசோதனையை முன்னின்று நடத்துகிறார். சூரிய கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த ராக்கெட் பதிவு செய்யும்.

மூன்று ராக்கெட்டுகளும் பூமியில் இருந்து 420 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று பின்னர் பூமியில் விழுந்துவிடும். முதல் ராக்கெட் கிரகணத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாவது ராக்கெட் கிரகணத்தின் போதும், மூன்றாவது ராக்கெட் கிரகணம் முடிந்த 45 நிமிடங்களுக்குப் பிறகும் ஏவப்படும்.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 80 கி.மீ. மேலிருந்து தொடங்கும் வளிமண்டலத்தின் அடுக்கு அயனோஸ்ஃபியர் எனப்படும். இந்த அடுக்கில் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் உள்ளன.

இது விண்வெளி மற்றும் வளிமண்டலத்திற்கு இடையில் பூமியின் ஒரு வகையான பாதுகாப்பு அடுக்கு ஆகும். இது ரேடியோ அலைகளை வெளியிடும் ஓர் அடுக்காகும். ராக்கெட் உதவியுடன், கிரகணத்தின் போது இந்த அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முக்கியமான ஆய்வு நடத்தப்படும்.

பொதுவாக, அயனி மண்டல ஏற்ற இறக்கங்கள் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைப் பாதிக்கின்றன. சூரிய கிரகணம் இந்த மாற்றத்தை விரிவாக ஆய்வு செய்ய ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில், நமது தகவல் தொடர்பு அமைப்பை எந்தெந்த விஷயங்கள் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.

எக்லிப்ஸ் மெகா மூவியில், நாசாவின் உதவியுடன் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையின் படி, சூரிய கிரகணத்தைப் பார்க்கும் நபர்கள் அதை புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எடுக்கும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்.

இதன் மூலம், சூரிய வட்டத்திற்கு வெளியே வெவ்வேறு வாயுக்களால் ஆன வளிமண்டலத்தின் வெவ்வேறு படங்கள் கிரகணத்தின் போது பெறப்படும்.

சூரியனின் மேற்பரப்பில் உள்ள அதீத ஒளியின் காரணமாக, அதைச் சுற்றியுள்ள உறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவை.

இந்த கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றி ஒரு வளையம் தெரியும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களும் தெரியும். அவற்றை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

நாசாவின் அதிக உயரத்தில் பறக்கும் ஆய்வு விமானம் 50,000 அடி உயரத்தில் இருந்து கிரகணத்தைப் புகைப்படம் எடுக்கும். பல உபகரணங்களும் இந்த விமானங்களில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், கிரகணத்தின் போது வளிமண்டல மற்றும் தட்பவெப்ப மாற்றங்களை பதிவு செய்ய எக்லிப்ஸ் பலூன் (Eclipse Balloon) திட்டமும் செயல்படுத்தப்படும்.

சுமார் 600 பலூன்கள் வளிமண்டலத்தில் பறக்க விடப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த பலூன்களில் உள்ள பல்வேறு கருவிகள் கிரகணத்தின் விளைவுகளை பதிவு செய்யும்.

இது தவிர, பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் சோலார் ஆர்பிட்டர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றில் உள்ள விண்வெளி வீரர்களும் இந்த கிரகணத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வார்கள்.

சூரிய கிரகணத்தைக் காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும், கிரகணத்தின் போது நடத்தப்பட்ட ஆய்வுகள் வரலாற்றில் சில முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மே 19, 1919 அன்று முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

1866 இல் சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான் அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x