மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பாடசாலைகளில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர், மாணவர்கள் மத்தியில் போசாக்கின்மை குறைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக ஆசிரிய வட்டாரங்கள் கூறுகின்றன.
‘பசி வந்தால் பத்தும் பறந்து விடும்’ என்று எமது ஆன்றோர் கூறியிருக்கின்றனர். அதாவது பசியால் வாடுகின்ற ஒருவர் பல சிறப்புகளை இழக்க நேரிடும் என்பதை இப்பழமொழி குறிக்கிறது. அதாவது பசிவந்து அந்த பசியை தீர்க்க உணவு கிடைக்காத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, ஆசை ஆகியவற்றை இழந்துவிடுவார் என்பது அப்பழமொழியின் பொருள் ஆகும்.
எமது உடலுக்கு உணவு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையே இப்பழமொழி உணர்த்துகின்றது. மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கும், அவனது செயற்பாடுகளில் தளர்வு ஏற்படாதிருக்கவும் உணவுதான் வழியேற்படுத்திக் கொடுக்கின்றது என்பது இதன் மூலம் புலனாகின்றது. பசியால் வாடுகின்ற ஒருவர் எந்தவொரு செயலையும் மேற்கொள்வதற்கு முன்வர மாட்டார். எவ்வேளையிலும் அவர் உறக்கநிலையிலேயே இருப்பதற்கு விரும்புவார்.
உடலுக்கான உணவுத் தேவை உருவாகின்ற போது பசி ஏற்படுகின்றது. உடலில் போசாக்கு குறைந்து விடுகின்றது. அப்போது எமது உடலானது உணவை அவசரமாக நாடுகின்றது. அதுவே பசி ஏற்படுகின்ற உணர்வாகும். பசி ஏற்படுகின்ற போது உணவு உண்ணாவிடில், உடலானது போசாக்கின்றி துவண்டு போய் விடுகின்றது. உணவு இன்றேல் எவராலும் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாமல் போய்விடுகின்றது.
மாணவர்களின் நிலைமையும் இவ்வாறானதுதான். ‘இளமையில் கொடிது வறுமை’ என்றார் தமிழறிஞரான மூதாட்டி ஔவையார். அதாவது வறுமையில் வாடுவது கொடுமையாக இருந்த போதிலும், இளமைக் காலத்தில் வறுமையில் வாடுவது அதனைவிட மிகவும் கொடுமையானது என்பதுதான் ஔவையாரின் கூற்றாகும்.
இளமைக் காலத்தில் வறுமையில் அகப்படுவதானது ஒருவருக்கு சிறிய வயதில் கிடைக்க வேண்டிய அத்தனை வளங்களையும் இல்லாமல் செய்து விடுகின்றது. கல்விதான் அவற்றில் முக்கியமானது. கல்விக்கான தடைகளில் வறுமையும் ஒன்றாகும். ஒரு மாணவன் வயிற்றுக்கு உணவின்றி எந்நேரமும் பசியால் வாடுகின்ற போது, கல்வியைப் பற்றி எவ்வாறு கவனம் செலுத்த முடியும்? ஆகவேதான் வறுமை காரணமாக மாணவர்கள் பலர் கல்வி வாய்ப்பையே பெற்றுக் கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
நாட்டில் கடந்த அரசாங்க காலத்தில் கொவிட் தொற்று தலைதூக்கியதும், மாணவர்களின் கல்வியானது பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டது. பாடசாலைகள் மூடப்பட்டதனால், மாணவர்கள் தனியார ரியூஷன்களையே நாட வேண்டியிருந்தது. கொவிட் நெருக்கடியை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ரியூஷன் ஆசிரியர்களாவர்.
அக்காலத்தில் ஒன்லைன் மூலமாகவே ரியூஷன் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொவிட் தொற்று தலைதூக்குவதற்கு முன்னர் ரியூஷன் ஆசிரியர்கள் எவ்வளவு தொகை கட்டணத்தைப் பெற்றுக் கொண்டனரோ, அதனையும் விடக் கூடுதலான கட்டணத்தையே கொவிட் பரவல் காலத்தில் பெற்றுக் கொண்டனர். கொவிட் வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி கல்விக்கு விலைபேசியவர்கள் ரியூஷன் ஆசிரியர்களாவர்.
அக்காலத்தில் வறிய மாணவர்களின் கல்வி முற்றாகவே பாதிக்கப்பட்டது. ரியூஷன் வகுப்பையே மாணவர்கள் முற்றாக நம்பியிருந்த அக்காலத்தில் மாணவர்கள் பலர் வறுமை காரணமாக வாய்ப்பின்றிப் பாதிக்கப்பட்டனர். கொவிட் காலத்தில் நடத்தப்பட்ட அரசாங்கப் பரீட்சைகளில் வறிய மாணவர்கள் பெருமளவானோர் போதுமான அளவு புள்ளிகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டதைக் காண முடிந்தது.
வறுமையானது கல்வியைப் பாதிக்கச் செய்கின்றது என்பதை கொவிட் காலத்தில் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. வறுமையின் பிரதிபலிப்புகளில் ஒன்று பட்டினி ஆகும். பொருளாதார நெருக்கடி காலத்தில் வீட்டில் உணவுக்கு வழியின்றி வெறும்வயிற்றுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள் பலர் வகுப்பறையில் மயங்கி வீழ்ந்த காட்சிகளையும் அக்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக கேள்வியுற முடிந்தது.
வறுமை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்பது இன்றைய அரசாங்கத்தின் உறுதியான கொள்கை ஆகும். மாணவர்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், சிறந்த கல்வியறிவுடனும் திகழ வேண்டுமென்று அரசாங்கம் விரும்புகின்றது. எனவேதான் அரசின் அறிவுறுத்தலுக்கமைய மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை உரியபடி பயன்படுத்திக் கொள்ளத் தவறுதல் கூடாது. சத்துணவுத் திட்டத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பெற்றோரும் முழுமையான ஆதரவை வழங்குவது அவசியமாகும்.