பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பின்தங்கிய செங்காமம் கிராமத்தில் குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் சுமார் 250 குடும்பங்கள் பல்வேறு அசௌகரியகங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 250 குடும்பங்கள் இப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.வீதி, போக்குவரத்து, குடிநீர் என அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களுக்கு பொத்துவில் பிரதேச சபையினால் வாரத்தில் ஒருமுறை பெளசர் மூலம் குடிநீர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்பட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அதிக வெப்ப நிலை காணப்படுவதால் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் தூரப்பிரதேசங்களிலுள்ள உவர் நீரைத் தேடிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கிராமத்தில் வாழும் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை, நன்னீர் மீன்பிடி போன்ற தொழிலையே தமது வாழ்வாதாரமாக இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள அல் மினா பகுதியில் விசேட தேவையுடையவர்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் வசிப்பவர்களுக்கும் பாரிய குடிநீர் பிரச்சினை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான குடிநீர் பிரச்சினை நிலவுவதால் சிலர் இக்கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒலுவில் விசேட நிருபர்