Home » ஐ.ம.ச. – பீரிஸ் உள்ளிட்ட நிதஹஸ ஜனதா சபாவுடன் கூட்டணி

ஐ.ம.ச. – பீரிஸ் உள்ளிட்ட நிதஹஸ ஜனதா சபாவுடன் கூட்டணி

- ஒப்பந்தம் இன்று BMICH இல் கைச்சாத்து

by Rizwan Segu Mohideen
April 5, 2024 4:39 pm 0 comment

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கும் ‘நிதஹஸ ஜனதா சபாவ’ (சுதந்திர மக்கள் காங்கிரஸ்) உறுப்பினர்களுக்கும் இடைய கூட்டணி அமைப்பதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ். குமாரசிறி, (வைத்தியர்) உபுல் கலப்பத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.

சலுகைகள், வரப்பிரசாங்களை விடுத்து நாட்டிற்கான பயணத்தில் நாம் ஒன்றிணைவோம் என, இதன்போது கருத்து வெளியிட்ட, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீழ்ச்சியடைந்து சரிந்து வரும் தேசத்தைக்கு புதிய மறுமலர்ச்சியின் மூலம் வலுவான முன்னோக்கி நகர்வைச் செயல்படுத்துவதன் மூலம் நமது நாட்டைப் பொருளாதார மற்றும் சமூக அவலங்களில் இருந்து காப்பாற்றும் பயணத்தைத் ஆரம்பிப்பதற்கான மற்றொரு முக்கியமான வாய்ப்பாக இதை குறிப்பிடலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய கருப்பொருள் ‘தங்களுக்கு முன் நாடு’ என்பதாகும். மக்களின் ஆணையால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் யாரும் தனிப்பட்ட முறையில் சுகபோகங்களை அநுபவிக்க முடியாது. 220 இலட்சம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கு வழமையான அனைத்து சலுகைகளையும் சலுகைகளையும் ஒதுக்கிவிட்டு, நாட்டின் தற்காலிகக் காவலர்களாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகபட்ச தியாகங்களைச் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் தற்காலிக பராமரிப்பாளர்களாக, கூடிய தியாகத்துடன் வழக்கமான வெகுமதிகள் மற்றும் சலுகைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, 220 இலட்சம் மக்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பயணத்தின் முன்னோடியாக செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கையை உலகில் முதலிடத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் நாம் மக்களை மையப்படுத்திய அரசாட்சியை முன்னெடுப்போம். எம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் பொதுநலன், பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கியே அமைந்திருக்கும். சமூக சமத்துவம் மற்றும் நீதியின் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தல், சமூக ஜனநாயகம், மனிதநேய முதலாளித்துவம்,மக்கள் மைய சோசலிசம், சமூக ஜனநாயகக் கொள்கைகளை கலந்த, சகல கோட்பாடுகளினதும் நேர்மறையான அம்சங்களை இணைத்துக் கொண்டு ஒரு நடுத்தரப் பாதையிலமைந்த பயணத்தை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களை அடிப்படையாகக் கொண்ட சௌபாக்கியத்துக்கு இட்டுச்செல்ல நடவடிக்கை எடுப்போம். நாட்டின் தேசிய வருமானத்தில் 52% ஐ 20% செல்வந்தர்களே அனுபவித்து வருகின்றனர். 20% வறியோர் தேசிய வருமானத்தில் 4.5% யே அனுபவிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது விடயம். சௌபாக்கியம் என்பது அனைவருக்கும் பயனுடையதாக அமைய வேண்டும். அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தி என்பது அனைவரும் பங்குதாரர்களாக இருக்கும் அபிவிருத்தியாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்னும் பல கட்ட மக்கள் மைய கூட்டணிகள் எதிர்காலத்தில் உருவாகும். இந்த கூட்டணிகளின் பின்னணியில் சலுகைகளோ அல்லது வரப்பிரசாதங்களோ வழங்கப்படவில்லை, வழங்கப்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சுயநலமின்றி பொது மக்களுக்கு தன்னலமின்றி சேவையாற்றும் உன்னத பொது சேவைக்காக அணி திரள்வோம். இனம், மதம், சாதி, குலம், கட்சி பேதமின்றி நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்பும் பயணத்தில் 220 இலட்சம் மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்கத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

அதிக வரிச் சுமை, வாழ்க்கைச் செலவு போலவே இலஞ்சம் ஊழலினால் நாட்டு மக்களை நசுக்கி ஒடுக்கும், நாட்டு மக்களின் பொது எதிரியான ரணில் ராஜபக்ச அரசை விரட்டியடித்து, மக்கள் மைய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மகா சங்கத்தினர் தலைமையிலான சமயத் தலைவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT