Thursday, July 18, 2024
Home » மக்களுக்கான திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளையும் சார்ந்தது

மக்களுக்கான திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளையும் சார்ந்தது

- ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய

by Rizwan Segu Mohideen
April 5, 2024 1:49 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தொழிற்சங்கள் தொடர்பாடல் பிரிவினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் நாட்களில் இந்தச் சந்திப்புகளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு மக்களுக்கான மேற்படி வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்த முன்வருமாறு அழைப்பு விடுத்த சமன் ரத்னப்பிரிய, மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்த இந்த வேலைத்திட்டம் உதவும் என்றும் கூறினார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் சரியான வேலைத்திட்டத்தின் பலனாக நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

75 வருடங்களில் காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நாடு சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், 2022 ஜூலை மாதத்தில் 19 மில்லியன் டொலாக சரிவடைந்திருந்த வௌிநாட்டுக் கையிருப்பு, 2024 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (விவசாய வலுவூட்டல் மற்றும் காணி) சந்திரா ஹேரத், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் (உணவுப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி) வர்ணத் பெரேரா மற்றும் சமூக நலன்புரிச் நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.

இங்கு மேலும் கருத்துரைத்த சமன் ரத்னப்பிரிய,

”நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல முக்கிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த வேலைத்திட்டங்கள் இன்று செயற்படுத்தப்படுகின்றன. அதன்படி உறுமய, அஸ்வெசும , மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட மக்களுக்கு பெருமளவில் பலனளிக்கும் திட்டங்கள் குறித்து அனைவரையும் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்.

உறுமய வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். 20 இலட்சம் மக்கள் அதனால் பயனடைவர். வரலாற்றில் ஒருபோதும் இந்நாட்டில் இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

உறுமயவின் முதற்கட்டமாக 10,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு விரைவில் காணி உறுதிகள் வழங்கப்படும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் ஆகிய இந்த மூன்று வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அவ்வாறு இல்லாமல் இந்த வேலைத் திட்டங்களை வெற்றகரமாகச் செயற்படுத்த முடியாது. மேலும், அது குறித்து மக்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய இந்தத் திட்டங்களை செயற்படுத்த அரசியல் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.

மேலும் சமூர்த்தி திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 8000 ரூபாய் வரையில் பெற்றவர்கள் அஸ்வெசும திட்டத்தில் குறைந்த பட்ச நிவாரணமாக 15000 ரூபாய் வரை பெறுகின்றனர். பொருளாதார நெருக்கடியால், மக்கள் மத்தியில் வறுமை அதிகரித்தது. 05 இலட்சம் பேர் தொழிலை இழந்தனர். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

ஆனால் அவற்றை தொடர்ச்சியாக வழங்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. இந்த வேலைத்திட்டங்களின் ஊடாக பொருளாதார ரீதியில் மக்களை வலுவூட்டுவதே அவரது நோக்கமாக உள்ளது. அதனால் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்ற நாம் இடைத் தரகர்களாகச் செயற்பட வேண்டும்.

அதன்படி மலைநாட்டு தசாப்தம் வேலைத்திட்டத்தை 10 மாவட்டங்களின் 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் தொடர்ச்சியாக 10 வருடங்கள் செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம், குடிநீர், சுகாதார பாதுகாப்பு, வீதி உள்ளிட்ட 10 விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்திருக்கிறது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவான இந்த வேலைத்திட்டங்களை வலுவாகச் செயற்படுத்தி மக்களுக்கு அதன் பிரதிபலன்களை வழங்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க,

”2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது நாட்டில் காணப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் நினைவுக்கூற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான நெருக்கடியை ஒருபோதும் கேள்விபட்டத்தும், கண்டதும் இல்லை. இவ்வாறான நிலைமையே இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி தவித்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட அரசாங்கத்திடம் ஒரு சதமும் இருக்கவில்லை. 2022 ஏப்ரல் மாதம் நாட்டின் டொலர் கையிருப்பு 19 மில்லியனாக மாத்திரமே காணப்பட்டது.

வரலாற்றில் 75 வருடங்களாக இப்படியொரு நிலையை கண்டதும் கேட்டதும் இல்லை. நாட்டுக்கு வந்த எரிவாயு கப்பல் வௌியில் நின்றது. அந்த எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள 35 இலட்சம் ரூபாய் எம்மிடம் இருக்கவில்லை. கப்பலுக்கு தாமதக் கட்டணத்தை செலுத்தி நிறுத்தி வைத்திருந்தோம். அவ்வாறான நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்று கட்டியெழுப்பினார்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நாட்டுக்குள் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டு மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு 19 மில்லியன் டொலர்களாக மாத்திரமே காணப்பட்டது. 2024 பெப்ரவரி மாதம், மத்திய வங்கியின் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரித்திருக்கிறது.

ஜனாதிபதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பலனாக நாட்டில் மிக் குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT