Friday, June 14, 2024
Home » தற்போதைய வேலைத்திட்டத்தை கடுகளவில் மாற்றினாலும் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும்

தற்போதைய வேலைத்திட்டத்தை கடுகளவில் மாற்றினாலும் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும்

- வங்குரோத்து அடைந்த நாட்டுக்கு வறுமை புதிதல்ல

by Prashahini
April 4, 2024 10:59 am 0 comment

– அவர்களுக்காகவே ‘அஸ்வெசும’ நிவாரணத் திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல என்றும், வறிய மக்களின் பாதுகாப்புக்கான நிவாரணமாகவே சமூர்த்தியை போன்ற மூன்று மடங்கு நிவாரணத் தொகையை வழங்கும் அஸ்வெசும வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செலுத்த வேண்டியிருந்த நிலுவைத் தொகையில் 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடித்திருப்பதாகவும் இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. பின்னர் கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டது. அதனால் தற்போது நாடு சுமூகமான பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த நேரத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு கிட்டியதாக காணப்பட்டது. ஆனால் இன்றளவில் டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைந்துள்ளது. அதனால் இறக்குமதிப் பொருட்களுக்கான கொடுப்பனவுகளும் குறைவடைந்திருக்கிறது.

மேலும், பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. நிலுவைத் தொகையின் நடப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது.

மேலும், வட்டி விகிதம் குறைந்துள்ளது. 70% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆக குறைந்துள்ளது. அதனால் பொருட்களின் விலை உயர்வு விகிதமும் குறைந்துள்ளது. அதனால் நாடு பாதகமான நிலையிலிருந்து மீண்டுள்ளது என்றே கூற வேண்டும்.

தற்போதைய புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்தைப் பேண முடிந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அத்தோடு நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குரியாகிவிடும்.

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறை பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல, வறுமை நீங்க நாட்டின் வருமானம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டியது அவசியமாகும். விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் போது, தனிநபர் வருமானம் அதிகரித்து வறுமை குன்றும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், கடந்த கால நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே, சமூர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணந்தை வழங்கும் அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவையில் இருந்த 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று மாதங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படும்.

இவ்வாறான நிதி ஒழுக்கத்தை பேணுவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குள், இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். அதன் பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT