கட்டாருக்கு சொந்தமான அல் ஜசீரா உட்பட தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் ஒன்றுக்கு இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அல் ஜசீராவின் உள்ளூர் அலுவலகத்தை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா கவலையை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காசாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை தளமாகக் கொண்ட அல் ஜசீரா செய்தியாளர்கள் மாத்திரமே காசா போர் குறித்த செய்திகளை களத்தில் இருந்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு ஒளிபரப்புகளுக்கான அனுமதிக்கு தற்காலிக தடை விதிக்கவே இஸ்ரேல் பாராளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது.
இந்தத் தடை 45 நாட்களுக்கு அமுல்படுத்த முடியும் என்பதோடு தொடர்ந்து அதனை புதுப்பிக்க வேண்டி உள்ளது. இந்தச் சட்டம் ஜூலை வரையும் அல்லது காசா போர் முடியும் வரையும் அமுலில் இருக்கும்.