சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்திருக்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ‘கோழைத்தனமாக இந்த குற்றச்செயலுக்கு பதிலளிக்காது விடமாட்டோம்’ என்று சூளுரைத்துள்ளார்.
‘முன்னரங்கில் இருக்கும் எதிர்ப்புப் போராளிகளின் நம்பிக்கை மற்றும் உறுதிக்கு முன் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் சியொனிச அரசு தன்னை பாதுகாத்துக்கொள்ள குருட்டுத்தனமான படுகொலைகளை நிகழ்த்துகிறது’ என்று ரைசி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய தூதரகத்துடன் இணைக்கப்பட்ட ஐந்து மாடி கட்டடத்தின் மீது நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற வான் தாக்குதலில் ஈரானிய புரட்சிக் காவல் படையின் ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஈரானிய குத்ஸ் படையின் மூத்த தளபதிகள் இருவரும் அடங்குகின்றனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எந்த பதிலும் அளிக்கவில்லை.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.