Thursday, April 25, 2024
Home » இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஏழு தொண்டுப் பணியாளர்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஏழு தொண்டுப் பணியாளர்கள் பலி

சர்வதேச அளவில் கண்டனம்: உதவி விநியோகத்திலும் நெருக்கடி

by mahesh
April 3, 2024 6:00 am 0 comment

காசாவில் உணவு உதவிகளை எடுத்துச் சென்ற தொண்டு அமைப்பின் வாகனம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தொண்டு அமைப்புகள் தமது பணிகளை இடைநிறுத்த ஆரம்பித்துள்ளன.

சைப்ரஸில் இருந்து கடல் வழியாக காசாவுக்கு எடுத்துவரப்பட்ட உணவு உதவிகளை எடுத்துச் செல்லும் வாகனம் மீதே இஸ்ரேல் நேற்று முன்தினம் (01) வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்திற்கு காரணமாகியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சன்’ என்ற தொண்டு அமைப்பின் ஊழியர்களே இதில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. இதில் அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா மற்றும் பலஸ்தீன இரட்டை பிரஜைகள்கொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

தொண்டு நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட இரு கவசக் கார்கள் மற்றும் ஒரு சாதாரண வாகனங்கள் மோதல் இடம்பெறாத மத்திய காசா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே அந்த வாகனத் தொடரணி இலக்கு வைக்கப்பட்டதாக தொண்டு அமைப்பு குறிப்பிட்டது.

‘(இஸ்ரேலிய இராணுவத்துடன்) ஒருங்கிணைந்து செயற்பட்டபோதும், காசா கடல்வழி பாதை ஊடாக எடுத்து வரப்பட்ட 100 தொன்னுக்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவியை இறக்கி டெயிர் அல் பலாவில் உள்ள களஞ்சியத்தில் இருந்து புறப்பட்ட நிலையிலேயே இந்த வாகனத் தொடரணி தாக்கப்பட்டுள்ளது’ என்று வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சன் அமைப்பு கூறியது.

இந்த உதவிகள் கடந்த திங்கட்கிழமை காலையிலேயே சைப்ரஸில் இருந்து ஒரு தெப்பம் மற்றும் இரு கப்பல்கள் மூலம் காசா கடற்கரையை அடைந்தது. இது காசாவுக்கு கடல் வழியாக உதவிகள் அனுப்பப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாக இருந்தது.

‘இந்த துயர சம்பவத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள உயர் மட்டத்தில் ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் அவுஸ்திரேலிய நாட்டவரான சோமி பிரான்கொம் என்ற தொண்டு பணியாளர் இருப்பதை உறுதி செய்த அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பன்ஸ், ‘இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றார்.

மத்திய நகரான டெயிர் அல் பலாஹ்வில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து இந்த உடல்கள் எகிப்துக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒருவர் தொண்டு நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட டீசேர்ட்டை அணிந்திருப்பதும் மூன்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைக்கப்பட்டிருப்பதும் அங்கிருந்து வெளியான படங்கள் காட்டுகின்றன.

வெள்ளை மாளிகை, இந்தத் தாக்குதலினால் மனமுடைந்திருப்பதாகவும் பெரும் கவலை அடைத்திருப்பதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் அன்ரினே வொட்சன் தெரிவித்துள்ளார்.

‘கடும் தேவையுடைய மக்களுக்கு உதவிகளை வழங்கும் மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று அவர் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலை அடுத்து காசாவில் தமது உதவி செயற்பாடுகளை நிறுத்துவதாக வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சன் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மற்றொரு தொண்டு அமைப்பான அனேரா என்ற அமைப்பு காசாவில் பணிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நீடிக்கும் போரினால் காசாவில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் அங்கு உதவிகள் செல்வதை அதிகரிப்பதற்கு இஸ்ரேல் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி ஐ.நா. ஆதரவில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், காசாவில் இருக்கும் பாதி அளவான மக்கள் பெரும் பட்டினியை அனுபவித்து வருவதாகவும் அதன் வடக்கில் விரைவாக பஞ்சம் ஒன்று ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை செயற்படுத்தி வருவதோடு மனிதாபிமான உதவி விநியோகங்களை இஸ்ரேல் தடுப்பதாக ஐக்கிய நாடுகள் குற்றம்சாட்டுகிறது.

காசாவில் அவசர உதவி விநியோகத்தை உறுதி செய்யும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அங்கு ‘பஞ்சம் ஏற்பட்டு வருவதாகவும்’ அந்த நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

வெளிநாட்டு அரசுகள் வான் மற்றும் கடல் வழியாக உதவிகளை வழங்கி வருகின்றபோதும் தரைவழியான உதவி விநியோகங்களே தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும் என்று ஐ.நா. நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றன.

மறுபுறம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. தெற்கு காசாவின் ரபாவில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சில் ஒரே குடும்பத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். டெயிர் அல் பலாவில் இருக்கும் பள்ளிவாசல் ஒன்றின் மீதான வான் தாக்குதல் ஒன்றில் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தவிர, மத்திய மற்றும் கிழக்கு கான் யூனிஸ் நகரில் வீடுகள் மீது நடத்தப்பட்ட செல் வீச்சில் பலரும் கொல்லப்பட்டிருப்பதோடு காசா நகரின் செய்தூன் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் 71 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 102 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 33 ஆயிரத்தை நெருங்கி 32,916 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT