Thursday, April 25, 2024
Home » ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு முதன்முறையாக கிடைத்த அனுமதி

ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு முதன்முறையாக கிடைத்த அனுமதி

by mahesh
April 3, 2024 8:00 am 0 comment

கொடும் போரால் பாதிக்கப்பட்டு, பஞ்சத்தில் அவதியுறுகின்ற காசா நகருக்கு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவை சைப்ரஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து கடல்வழியாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காசாவில் கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதியை வெளியுலகில் இருந்து இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையிலேயே, அங்கு நேரடி உதவி விநியோகத்திற்கு தொண்டு நிறுவனங்கள் முயன்றுள்ளன.

இஸ்ரேல் இராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள பாலஸ்தீன மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எதுவுமின்றியும், மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு தற்போது தரைவழியாகவும், வான்வழியாகவும் அளிக்கப்பட்டு வரும் நிவாரணப் பொருள்கள் போதுமானதாக இல்லை.

இதனாலேயே சைப்ரஸில் இருந்து 500 தொன் உதவிகள் திரட்டப்பட்டிருப்பதாகவும், அவையும் காசாவுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தப் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா கேட்டுக் கொண்டிருக்கிறது.

தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்குத் தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் எச்சரித்துள்ளார். இவரது கருத்துக்கு, அமெரிக்கா மற்றும் பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டு மக்களும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை விநியோகம் செய்து வருகிறது.

யுத்தத்தினால் 32,000 இற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள பசி, பட்டினியாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

தற்போது சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு, மருந்துப் பொருட்கள் எகிப்தின் ரஃபா (Rafa) எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜெரமி இக்குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்று வரும் போரில், காசா மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவை கிடைப்பது சிரமமாகியுள்ளது.

இந்த மனிதநேயமற்ற விவகாரம் குறித்து விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு இஸ்ரேல் குறுக்கே நிற்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை இஸ்ரேல் வெளிப்படையாக கடைப்பிடிக்க மறுத்துவிட்டது. உணவு மருந்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் நாட்கணக்கில் எல்லையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே உணவுகள் வீணாக்கப்படுகின்றன.

காசாவுக்கு உதவிகளை விநியோகிப்பதற்கான புதிய கடல் பாதை ஒன்றை ஏற்படுத்தும் முன்னோடித் திட்டமாக, சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து இருநூறு தொன் உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று மார்ச் 12 காசாவை நோக்கி புறப்பட்டது. காசாவின் வட மேற்காக 320 கிலோமீற்றர் தொலைவிலேயே சைப்ரஸ் நாடு உள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியான ரமழானாக இம்முறை அமையவில்லை. மக்கள் குளிருக்கு மத்தியில் கூடாரங்களில் இருக்கிறார்கள்.

காசாவில் துறைமுகக் கட்டமைப்பு ஒன்று இல்லாத போதும், அழிக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளை பயன்படுத்தி இறங்குதுறை ஒன்றை உருவாக்கவிருப்பதாக தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. தற்போது காசா கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இப்போது காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களைச் சேகரித்த ஸ்பெயின் நாட்டின் ‘ஓப்பன் ஆர்ம்ஸ்’ (Open Arms) என்ற அமைப்புக்குச் சொந்தமான கப்பல் காசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

‘ஓபன் ஆர்ம்’ என்ற ஸ்பெயின் தொண்டு நிறுவனத்தின் இந்தக் கப்பல் அரிசி, மாவு மற்றும் உணவு பொருட்களை ஏற்றி சைப்ரஸின் லர்னாகா துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.

கடந்த 2005- ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியமே அதிக நிதி உதவி அளித்திருப்பதோடு, ஸ்பெயின் தொண்டு நிறுவனம் கப்பலை வழங்கியுள்ளது.

–ஐங்கரன் 
விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT