Sunday, April 21, 2024
Home » தூதுவர்களோ, தூதரகங்களோ என்னிடம் கோரவில்லை
அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு

தூதுவர்களோ, தூதரகங்களோ என்னிடம் கோரவில்லை

சபையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

by mahesh
April 3, 2024 1:20 pm 0 comment

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின்போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு வெளிநாட்டுத் தூதரகங்கள் அல்லது தூதுவர்கள் எவரும் நம்மிடம் வலியுறுத்தவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார். அப்படி வலியுறுத்தியதாக தாம் எந்த சந்தர்ப்பத்திலும் எங்கும் கூறவுமில்லையெனவும் அது தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிரணி சுயாதீன எம்.பி கவிந்து குமாரதுங்க தெரிவித்த கூற்று ஒன்றுக்குப் பதிலளித்த போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் கவிந்து குமாரதுங்க மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட கருத்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அரசியல் குழப்பங்கள்,நெருக்கடிகள் தீவிரமடைந்த போது அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கத்தை பொறுப்பேற்க வெளிநாட்டு தூதுவராலயங்கள் உங்களுக்கு அழுத்தம் பிரயோகித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் அவ்வாறு அழுத்தங்களை பிரயோகித்த தூதரகங்களினதோ தூதுவர்களினதோ பெயரை குறிப்பிடவில்லை.

ஆகவே, அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அழுத்தம் பிரயோகித்த தூதுவராலயங்கள் , தூதுவர்கள் யார் என்பதை சபையில் அறிவியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ‘நீங்கள் தவறான விடயங்களை கூறுகின்றீர்கள். நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளின்போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு வெளிநாட்டு தூதரகங்கள் ,தூதுவர்கள் எவரும் என்னிடம் வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்தியதாக நான் கூறவுமில்லை,எனவே சபையில் தவறான விடயங்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT