மியன்மாரில் அந்நாட்டு பயங்கரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு அந்த பயங்கரவாதிகள் கோரும் நிதியை வழங்க முடியாதென வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. முன்வைத்த விசேட கூற்றொன்றிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி தமது கேள்வியின் போது; மியன்மாரில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? அது தொடர்பில்அரசாங்கம் விரைவாக செயற்படுகிறதா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அந்த வகையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ‘மியன்மார் அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு அப்பாற்பட்ட பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் தான் இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய நிலையில் அவர்கள் கோரும் நிதியை செலுத்தி இவர்களை விடுவிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. எனவே பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்ள தாய்லாந்து மற்றும் மியன்மார் அரசாங்கத்துடன் அரசாங்கம் என்ற வகையில் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்