தினகரனின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வு லேக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தினகரன் பத்திரிகையுடன் நெருங்கிப் பயணிக்கும் சமூகப் பணியாளர்களும், நீண்ட காலம் ஊடகத்துறையில் பணியாற்றிய ஊடகத் துறை சார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சபைத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் முன்னிலையில் தினகரன் , தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மாவனல்லை நியூமென்ஸ் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். ஹுஸைன் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.
உங்களது ஆரம்ப வாழ்க்கை பற்றிக் கூறுவீர்களா?
நான் 1974.04.14 ஆம் திகதி மாவனல்லை ஹிங்குல்லோயா என்ற இடத்தில் பிறந்தவன். தாய் பெயர் கதீஜா பீபி . வயது 84 அவர் ஆரம்ப காலத்தில் ஆசிரியையாக கடமையாற்றியவர். திருமணத்துடன் அத்தொழிலை இடைநிறுத்தி விட்டார். தந்தை ஆதம்பிச்சை. வயது 88. அவர் கொழும்பில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டவர். எங்கள் குடும்பத்தில் ஆறுபேர். நான்காவது பிள்ளை கடைசிப் பிள்ளை நான்.
1980 களில் ஆரம்பக் கல்வியினை மாவனல்லை சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்பதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டேன். அதே பாடசாலையில் இடைநிலைக் கல்வி வரையிலும் கற்று, 1990 களில் க. பொ. த.சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றினேன். அதன் பிறகு தொடர்ந்து க. பொ. த உயர் தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று 1993 களில் பரீட்சைக்குத் தோற்றினேன். இக்கால கட்டத்தில் கல்வி பயிலும் போது பொருளாதார ரீதியாக பிரச்சினைகள எதிர்நோக்கியிருந்தோம். எவ்வாறாயினும் நாங்கள் கல்வியை விட்டு விடவில்லை. தாயார் உந்து சக்தியாக இருந்தார்.
நான் படிக்கின்ற போது மாணவத் தலைவராக இருந்துள்ளேன். அப்பொழுது வை. எல். எம். றாசிக் அதிபராகக் கடமையாற்றினார். மாணவப் பிரிவின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்ட போது எனக்கு சின்னம் சூட்டி அந்த நியமனத்தை வழங்கி வைத்தார். அந்த ஞாபகார்த்த புகைப்படம் இன்னும் என்னிடம் இருக்கிறது. அவர் தற்போது உயிருடன் இல்லை.
மனைவியின் பெயர் எம். ஆர். எப். ரிஹானா. மகள் ஹஸ்ரா சாரா. பயோ மெடிக்கல் படித்துக் கொண்டிருக்கின்றார். அவர் எதிர்கால குறிக்ேகாள் வைத்தியராவது. மகன் எம். எச். ரிபா அஹ்மட். 10 ஆம் ஆண்டு கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார். 2023 இல் சப்ரகமுவ மாகாணத்தில் இளம் கண்டு பிடிப்பாளர் போட்டியில் முதல் பரிசு பெற்றார். மகள் எம். எச். ஹயானா அய்ஸல். முன்னணிப் பாடசாலையில் கல்வி பயிலுகின்றார்.
நீங்கள் தனியாக ஒரு கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்து இந்தளவுக்கு உயர்வதற்கு காரணமாக இருந்தவர் யார்?
1993 களில் க. பொ. த உயர் தரப் பரீட்சை எழுதிய நாளில் இருந்து கற்பிக்க ஆரம்பித்து விட்டேன். நான் க. பொ. த உயர் தரம் படித்துக் கொண்டு இருக்கும் போது எனது வகுப்பு மாணவர்களுக்கு விளங்காத பாடங்களை விளங்கப்படுத்துவேன். இந்த முயற்சியை எனது தாயார் அவர்கள்தான் தூண்டி ஊக்குவித்தார்கள். 1994 இல் ‘நியுமென்’ என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனத்தையும் ஸ்தாபித்தேன். இந்தக் கல்வி நிறுவனத்திற்கான பெயரையும் இட்டது எனது தாயார்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் என் தாயாருக்கும் தந்தைக்கும் நன்றி கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
இந்தக் கல்வி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான நோக்கம் யாது?
இலங்கையின் கல்விக் கொள்கையின்படி ஆரம்பம் இடை நிலைக் கல்வி வரை கற்று பல்கலைக்கழகம் செல்வார்கள். இதில் பெரியதொரு தொகையிலான பிள்ளைகள் க. பொ. த.சாதாரணப் பரீட்சைக்கும் தோற்றியதுடன் இடை விலகி விடுவார்கள். அதாவது க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்கள் விளிம்பு நிலைக்கு பின்தள்ளப்படுகின்ற நிலைமைகள் காணப்பட்டன. அந்த மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லலாம் என்ற தெளிவை வழங்குவதற்காக இந்த கல்வி நிறுவனம் தோற்றம் பெற்றது.
க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறினாலும் க. பொ. த. உயர் கற்கையினை மேற்கொண்டு பரீட்சை எழுதி பல்கலைக்கழகம் செல்ல முடியும். இப்படியான மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தக் கல்லூரியை ஆரம்பித்தேன். இது குறித்து இப்பொழுது பரவலாக எல்லோர் மத்தியிலும் தெளிவு இருக்கின்ற நேரத்தில் நாங்கள் கடந்த சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இத்திட்டத்தை ஆரம்பித்து வெற்றியுடன் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
எமது இந்தக் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்ற கணிசமானளவு மாணவர் மாணவிகள் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்று இன்று உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் பற்றி
தனியார் கல்வி நிறுவனத்தில் க. பொ. த சாதாரணதரப் பெறுபேறுகள் இல்லாமல் பிரத்தியேகமான க. பொ. த.உயர் தர வகுப்புக்களை ஆரம்பித்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இக்கல்வி நிறுவனம் முறையற்ற விதத்தில் செயற்படுகிறது. இக் கல்வி நிலையத்தில் கல்வி கற்பதில் பிரயோசனம் இல்லை என்ற பொய்யான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து மாணவர்களது வருகையை தடுப்பதில் ஆரம்ப காலத்தில் முயற்சிகள் செய்தார்கள். இது தொடர்பில் பிள்ளைகள் விரக்தி நிலையில் இருந்தார்கள். இருப்பினும் அந்தப் பிள்ளைகளைத் திறன்படக் கற்பித்து அவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி சாதனைகள் படைத்தோம்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் தனியார் விஞ்ஞானக் கல்லூரியை ஆரம்பித்து க. பொ. த உயர் தர விஞ்ஞான பிரிவில் வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். இதன் மூலம் சிறந்த அறுவடைகளை பெற்று எமது மாணவர்கள் உயர் கல்வியினைக் கற்று வருகின்றார்கள். இன்று உதாரணமாக பேருவளை நளீமியா கலாபீடத்தில் கல்வி கற்ற பெரும்பான்மையான மாணவர்கள் இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் நிறையப் பேர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் வெளிவாரி பல்கலைக்கழகப் பரீட்சைக்குத் தோற்றி பட்டம் பெற்றவர்களே ஆவர். இதே போன்றுதான் எங்கள் நியுமென்ஸ் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்ற மாணவர்கள் யாவரும் வைத்தியராகவும் பொறியியலாளராகவும் கணக்காளர்களாகவும் பல்வேறு நாடுகளில் தொழில் புரிகின்றார்கள்.
குறிப்பாகச் சொல்லப் போனால் கல்வியில் விளிம்பு நிலையில் உள்ள பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து பிற்காலத்தில் சரித்திரம் படைத்தவர்களாக உருவாக்குவதே எமது நோக்கம். அந்த அடிப்படையில் 28 வருட காலமாக இந்தக் கல்விப்பணியை மேற்கொண்டு வருகின்றேன். ஒரு தனி நபராக இருந்து செயற்பட்டு வருகின்றேன்.
நீங்கள் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்து கொண்டு பெரும் சாதனைகள் நிலைநாட்டி வருகின்றீர்கள்? அந்த வகையில் சவால்களை எப்படி எதிர்நோக்குகின்றீர்கள் என்று கூற முடியுமா?
2002 இல் மின்சார ஊழியர் ஒருவர் வீட்டில் மின்வேலை செய்து கொண்டிருந்தார். இதன் போது அருகில் நின்று கொண்டிருந்தேன. இரும்புக் கம்பி மின்சாரக் கம்பியில் பட்டதால் என்னுடலை மின்சாரம் தாக்கியது. இதில் இரு கைகளை இழந்து கால் விரல்கள் இழந்து உடம்பில் 25 விகிதம் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி பாதிப்பு நிலை அடைந்தேன். ஆனாலும் உடல் நிலையை ஆரோக்கியமாக்கிக் கொண்டு ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்து கை விடாமல் தொடர்ந்து கல்வி நிலையத்தை இன்று வரை இயக்கி வந்துள்ளேன். குறையை குறையாக நினைக்காமல் மன உறுதியோடு மனைவி, பிள்ளைகள், ஆசிரியர் குழாம் ஆகியோர்களுடைய ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
இந்தக் கல்வி நிலையத்தில் பணியாற்றுகின்ற ஆசிரியர் குழாத்தின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களுடைய ஒத்துழைப்பினால் இக்கல்வி நிறுவனத்தை தொய்வில்லாமல் திறன்பட படிப்படியாக ஒரு முன்னேற்றகரமான பாதையில் மேற்கொண்டு வருகின்றோம்.
எனக்கு இரு கைகள் இல்லா விட்டாலும் எனது காரை நானே செலுத்துமளவுக்கு இயங்கி வருகின்றேன். கைகள் உள்ள நேரத்தில் எவ்வகையிலான வேலைகளைச் செய்தேனோ அதே வேலைகளை கைகள் இல்லா நேரத்திலும் செய்து கொண்டு இருக்கின்றேன். வைத்திய சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவுக்கும் தனியே சென்று வந்துள்ளேன் என்பது மிக முக்கியமான விடயமாகும்.
இந்த விபத்து ஏற்பட்ட ஆரம்பத்தில் நாள் முதல் இரு கைகளை இழந்தவன் என்ற நிலையிருந்தாலும் எனது மனைவின் பங்களிப்பு இருந்தமையால் எனக்கு கைகள் இல்லை என்ற நிலை இருக்கவில்லை. மனைவியினுடைய பங்களிப்பு விவரிக்க முடியாது. அதற்கு சொல்ல வார்த்தையில்லை. எனக்கு கையில்லை என்று நான் இதுவரையிலும் யோசிக்க வில்லை. எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருப்பவர் என் மனைவிதான்.
உங்கள் சமூகப் பங்களிப்பு பற்றிக் கூறுவீர்களா?
எங்கள் தாய், தந்தையர்கள் சிறிய வயதில் ஊட்டிய சிந்தனைகள்தான் இன்று நாங்கள் அடுத்தவர்களுக்கு செய்கின்ற சமூகப் பணியாகும். கல்விக்காக நிறையப் பங்களிப்புச் செய்துள்ளேன். வசதிகள் அற்ற பிள்ளைகள், கட்டணங்கள் அறவிடாமல் சலுகைகள் அடிப்படையில் இங்கே படித்தவர்கள் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார்கள். ஆசிரியராக இருக்கின்றார்கள். இவ்வாறு பல்வேறு துறைகளில் சிறந்த உயர் பதவிகள் வகிக்கின்றார்கள் என்று கூறலாம்.
நூல்வெளியீடு போன்ற பொதுவாக கூட்டம் நடத்துவதற்கு எனது கல்வி நிலையத்தின் மண்டபத்தை வழங்கி உதவி செய்வேன். கேகாலை மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கு என்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கியுள்ளேன். இலவச கருத்தரங்குகள் நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றேன். சில பாடசாலைகளில் நிலவும் சிறிய பௌதீக வளப் பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் பங்களிப்புக்கள் நல்கியுள்ளேன். க. பொ. த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு பாடசாலைக்கு கணிதப் பாடத்தில் சகல மாணவர்களை சித்தியடையச் செய்யும் நோக்கில் ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து செயற்படுத்தி அப்பாடசாலை மாணவர்கள் 87 விகிதமான மாணவர்கள் சித்தியெய்தினார்கள். அதேபோன்று அப்பாடசாலையில் 85 மாணவர்கள் சித்தியினை அடைந்தனர்.
நீங்கள் எவ்வகையிலான கல்வி நிலையங்களை நடத்தி வந்துள்ளீர்கள்?
தற்போது மானல்லையில் அமைந்துள்ள எங்கள் கல்வி நிலையத்தில் முதலாம் ஆண்டு முதல் க. பொ. த உயர் தரம் வரையிலான பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இவை தவிர கண்டியில் இரு சர்வதேசப் பாடசாலைகள் நடத்தி வந்தேன். ஒன்று 2011 -2018 களில் அல் இர்பான் சர்வதேச ஆண்கள் பாடசாலை. இப்பாடசாலையினை ஏழு வருடம் செய்தேன். 2019 களில் பிரைட் சர்வதேச பெண்கள் பாடசாலையினை ஆரம்பித்தேன். அதன் பிறகு அரச அங்கீகாரம் பெற்ற நியூமென்ஸ் உயர் தர விஞ்ஞானக் கல்லூரியினை ஆரம்பித்தேன். அது தற்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கு தங்கியிருந்து பிள்ளைகள் படித்து வருகின்றார்கள். நாட்டின் பல பாகங்களிலுள்ள பிள்ளைகளும் இங்கு கல்வி பயிலுகின்றனர். இக்கல்வி நிலையத்தில் இருந்து வைத்திய துறைக்கும் பொறியியற் துறைக்கும் கணிசமானளவு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவை தவிர ஏசியன் கெரஜ்வெட் கொலேஜ் என்ற பெயரில் பல்கலைக்கழக பட்டப் படிப்பு கற்கை நெறிகளையும் மேற்கொண்டு வருகின்றேன். இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடைய பட்டப் படிப்பை எமது ஏசியன் கெரஜ்வெட் கொலேஜ் ஊடாக கற்பித்து வருகின்றோம்.
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் நிறைய மாணவர் மாணவிகள் பயன் அடைந்து வருகின்றார்கள். இவ்வாறு பல்வேறு கல்வி நிறுவனங்களின் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றேன் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களது கல்விச் சேவையை கருத்திற் கொண்டு கிடைக்கப் பெற்ற சான்றுகள் குறித்துக் கூற முடியுமா?
நான் பாடசாலையில் கல்வி பயிலும் கால கட்டத்தில் கேகாலை மாவட்ட ஸ்ரீ லங்கா பௌத்த சங்கத்தின் தலைவர் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. சப்ரகமுவ கல்வி மேம்பாட்டுக்காக தொடர்ந்து பங்காற்றியமைக்காக மாவனல்லை கல்வி வலயத்தினால் சான்றிதழ் வழங்கி வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் மூலம் கலாநிதிப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.