போக்குவரத்து என்பது மனிதவாழ்வின் அன்றாட செயற்பாட்டுக்கான அத்தியாவசிய தேவையாகும். நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வேலைகளுக்கு செல்லவும் ஏனைய அன்றாட செயற்பாடுகளுக்கும் சைக்கிள் சவாரி அல்லது நடை போன்ற மாற்றுவழிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர். இதைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இலங்கை விளையாட்டு மருத்துவ சங்கத்தின் ஒத்துழைப்போடு சைக்கிள் சவாரி அல்லது நடையின் போது பொதுமக்கள் முறையான நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின் மூலமான சிறந்த சுகாதார ஆரோக்கிய பலன்களைப் பெற்று சுகாதார ரீதியான ஆபத்துக்களையும் தவிர்த்துக் கொள்ளும் வகையில் அறிவூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
அலுவலகங்களுக்கு சைக்கிள் மூலம் அல்லது கால்நடையாகச் செல்ல சிலர் எண்ணியிருக்கலாம். அவர்கள் ஒரு இடைவெளியின் பின் சைக்கிள் சவாரி செய்பவராக இருக்கலாம். அப்படியாயின் பின்வரும் காரணிகளில் அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
பின்வரும் பிரச்சினைகள் இருப்பின் சைக்கிள் ஓட்டத் தொடங்குமுன்னர் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்:
இருதய நோய் அல்லது நாள்பட்ட நோய்கள் அல்லது நாள்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகள் எடுப்பவர்கள். மார்புவலி, சுவாசக் கோளாறு, உடற் செயற்பாடுகளின் பின்னரான ஓய்வின்போது மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு ஏற்படுபவர்கள். எலும்பு, மூட்டு அல்லது தசைவலி என்பன ஏற்பட்டு அவை சைக்கிள் ஓட்டத்தின் பின் மற்றும் நீண்டதூர நடையின் பின் மோசமடைந்தால் அல்லது சைக்கிள் ஓட்டத் தொடங்கிய பின் இந்நிலை ஏற்பட்டால் ஆலோசனை பெற வேண்டும்.
காய்ச்சல், தடிமல், அல்லது வயிற்றோட்டம் இருப்பின் அவை குணமடையும் வரை சைக்கிள் ஓடுவதை தவிர்ப்பதே சிறந்தது.
40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து குறிப்பிட்டதோர் காலப்பகுதிக்கு எவ்விதமான தீவிரமான உடற்பயிற்சியும் செய்யாதவர்கள். கர்ப்பமுற்றிருந்தால்அல்லது மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு நிலையில் இருந்தால் சைக்கிள் ஓட்டத் தொடங்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ கண்காணிப்பு இன்றி உடற்பயிற்சி செய்யக்கூடாது என முன்னர் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தால் மேலதிக மருத்துவ ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். உடல் செயற்பாடு தயார் நிலை கேள்விக் கொத்து ஒன்றுக்கு இணையவழி மூலம் (Physical Activity Readiness Questionnaire (PARQ) online) பதில் அளித்து சுய மதிப்பீடு ஒன்றை செய்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் ஒரு வைத்தியரின் சிபார்சுகள் தேவையா என சுயமாக முடிவு செய்து கொள்ளலாம்.
ஒருவர் சைக்கிள் ஓட்டுகின்ற போது எவ்வாறு அதில் நிலைகொள்ள வேண்டும் என்பதில் நாம் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். சரியான நிலையில் அமர்ந்து சைக்கிளை ஓட்டுவதற்கு கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்வாறு சைக்கிள் ஆசனத்தின் உயரத்தையும், சைக்கிள் கைப்பிடியின் உயரத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
சைக்கிள் கைப்பிடியின் உயரம் சைக்கிளின் ஆசனத்தின் மட்டத்தோடு சமமாக இருக்க வேண்டும். அல்லது 10 சென்ரி மீட்டருக்கு மேல் உயரக் கூடாது. முழங்கை மூட்டு 165 பாகை வளைவில் இருக்க வேண்டும்.
கால் மிதிப்பு முன்னாலும் தரைக்கு சமாந்தரமாகவும் இருக்கின்ற போது முழங்கால் மூட்டின் முன்பகுதி கால் மிதிப்பின் அதே செங்குத்து மட்டத்தில் இருக்க வேண்டும்.
சைக்கிள் கைப்பிடியின் உயரம் சைக்கிளின் ஆசனத்தின் மட்டத்தோடு சமமாக இருக்க வேண்டும். அல்லது 10 சென்ரி மீட்டருக்கு மேல் உயரக் கூடாது.
இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டு என்பன சைக்கிளை ஓட்டும் போது சமமான செங்குத்து மட்டத்தில் இருக்க வேண்டும்.
முன்காலைப் பாவித்து சைக்கிளை மிதிக்க வேண்டும். அது சைக்கிள் ஓட்டுபவரின் பாதத்தின் முன் பகுதியாகும்.
சைக்கிள் ஓட்டமும் நடையும் பாதுகாப்பான உடல்பயிற்சி முறைகளாகக் கருதப்படுகின்றன. சைக்கிளை சரியான முறையில் பயன்படுத்துவதும் முறையான நடையும் தொற்றாநோய்கள் பலவற்றைக் குறைக்கக் கூடியவை. ஏற்கனவே இருக்கின்ற பல தொற்றா நோய்களை கட்டுப்படுத்தக் கூடியவை. இவை உடல் நல ஆரோக்கியத்தையும், உள நல ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியவை.
வீதிவிபத்துக்களையும் அதனால் ஏற்படும் காயங்களையும் தவிர்க்க பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்தவும்.
சைக்கிளை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிரேக் சரியாக வேலை செய்கின்றது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். டயர்கள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளனவா, செயினுக்கு போதிய எண்ணெய் இடப்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரவு நேரத்தில் செல்வதாயின் பின்பகுதியில் ஒரு சிவப்பு நிற விளக்கையும், முன் பகுதியில் ஒரு வெள்ளை நிற விளக்கையும் பயன்படுத்துங்கள்.
உங்கள் தலைக்கவசத்தை முறையாக அணிந்து கொள்ள மறவாதீர்கள். வெறும் வயிற்றோடு சைக்கிள் ஓட்டாதீர்கள். கையடக்க தொலைபேசி போன்ற கருவிகளுடனான தொடர்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டத்தின் பின் சிறிய ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மேற்கூறிய விடயங்களைக் கவனத்தில் கொள்வதன் மூலம் உங்களதும் மற்றவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
ெடாக்டர் இர்சாத் ஜப்பார்
(மருத்துவ ஆலோசகர்)
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவம், களுபோவில போதனா வைத்தியசாலை