Monday, April 22, 2024
Home » மக்களின் நலன்களை முன்னிட்டு சமையல் எரிவாயு விலைக்குறைப்பு

மக்களின் நலன்களை முன்னிட்டு சமையல் எரிவாயு விலைக்குறைப்பு

by mahesh
April 3, 2024 6:00 am 0 comment

சமையல் எரிவாயு விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு நிறுவனங்கள் இந்த விலைக்குறைப்புக்கான அறிவிப்பை விடுத்துள்ளன.

இந்த விலைக்குறைப்பின்படி 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை லிற்றோ நிறுவனத்தினால் ரூ. 135.00 இனாலும், லாப் கேஸ் நிறுவனத்தினால் ரூ. 625 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பைத் தொடர்ந்து இந்த இரண்டு நிறுவனங்களதும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 4115.00 ஆக இருக்கும். எரிவாயு சிலிண்டருகளுக்கான இவ்விலைக்குறைப்பை பாவனையாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் பிரதிபலன்களை நாட்டு மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும் அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிலர், ‘இது தேர்தலை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை’ என்றுள்ளனர். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்ற கதையாகும்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் வீழச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன் பிரதிபலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க இவ்விலைக் குறைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாத்திரம் விலை குறைக்கப்பட்டவில்லை. ஏற்கனவே பல பொருட்களுக்கும் விலைகள் அவ்வப்போது குறைக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் பெரிதும் அதிகரித்தன. எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பாவனையாளர்கள் உள்ளாகினர்.

அந்த நெருக்கடியிலிருந்து மக்களுக்கு நிவாரணங்களையோ சலுகைகளையோ பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அன்றைய ஆட்சியாளர்களே பதவி விலகினர்.

அந்த இக்கட்டான சூழலில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெப்பதற்கான வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.

அந்த வேலைத்திட்டங்களின் பயனாக குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சி பெறத் தொடங்கியது. குறிப்பாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நாட்கணக்கில் காத்திருக்கும் நிலைமை முடிவுக்கு வந்ததோடு, பொதுப்போக்குவரத்து சேவையும் வழமைக்குத் திரும்பியது. அதன் ஊடாக நாட்டு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களும் ஏற்பட்டன.

அந்த பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் ஊடாக நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று வந்ததோடு மறுமலர்ச்சிப் பாதையிலும் பிரவேசித்து இருக்கிறது.

இதன் பயனாக பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசௌகரியங்களும் நெருக்கடிகளும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. ஜனாதிபதி நாட்டின் தலைமையை ஏற்றதும் கட்சி நலன்களுக்கு அப்பால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். அதற்கேற்ப பொருளாதார ரீதியில் நாடு அடைந்து கொள்ளும் பிரதிபலன்களாக விலைக்குறைப்புகள், மற்றும் நிவாரணங்கள், சலுகைகள் ஊடாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில்தான் தற்போது சமையல் எரிவாயுவுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த போது அதன் பாதிப்புக்கள் மற்றும் தாக்கங்களின் போது பெரும்பாலான மக்கள் பொறுமை காத்ததோடு நெருக்கடிகளையும் சகித்துக் கொண்டார்கள்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் நாடு அடைந்து கொள்கின்ற பொருளாதாரப் பிரதிபலன்கள் அவ்வப்போது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. பொறுப்பு மிக்க அரசொன்றின் பணியே இது.

பொருளாதார நெருக்கடியின் போது அதன் தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்களின் ​முன்பாக பொறுமை காத்த மக்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் போது அதன் பிரதிபலன்களைப் பெற்றுக்கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அதனை தவறான கண்கொண்டு நோக்கவும் முடியாது. அதுவே மக்களின் கருத்தாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT