சிங்கப்பூர் சரக்கு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கவில்லை
அபாயகரமான பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சிங்கப்பூர் சரக்கு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கவில்லை என்றும் அதற்கிணங்க அமெரிக்காவில் பாலத்தில் மோதுண்ட கப்பல் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சரித்த ஹேரத் ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பலில் பாரியளவிலான வெடிப்பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருந்துள்ளமை உண்மையே. அந்த விடயங்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, அந்த கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அனுமதி பெறப்படவில்லை. அதனால் அதுதொடர்பாக விசாரணையை ஆரம்பிக்குமாறு துறைமுகம் மற்றும் சுங்கத்துறைக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளானதால்தான் கப்பலில் இருந்த அபாயகரமான பொருட்கள் தொடர்பில் அறிய முடிந்துள்ளது.
அதற்கிணங்க உரிய விசாரணைகளை மேற்கொண்டு பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்