Thursday, April 25, 2024
Home » கல்முனை தமிழர்களுக்கு தனியான எல்லையுடன் பிரதேச செயலகம் அவசியம்

கல்முனை தமிழர்களுக்கு தனியான எல்லையுடன் பிரதேச செயலகம் அவசியம்

அதனையே நாம் வலியுறுத்துகிறோம் - எச்.எம்.எம். ஹரீஸ்

by mahesh
April 3, 2024 6:45 am 0 comment

தமிழ் மக்களுக்கு தாம், எதிரானவர்களல்ல என்றும் கல்முனையில் தமிழர்களுக்காக ஒரு எல்லையுடன் பிரதேச செயலகம் அமைத்து வழங்கப்படுவது அவசியமென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி, எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இப்பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளோ முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல என்பதை சுட்டிக் காட்டிய அவர், மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் தரப்பினர் கோரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம், காணி அதிகாரம் போன்றவற்றை இடைக்காலத் தீர்ப்பில் நிராகரித்துள்ளதால், கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினையில் அரசு எவ்வாறு தலையிட முடியும் எனவும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வங்கி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். கல்முனை நகரத்தில் கல்முனை பிரதேச செயலகம் ஒன்றும் அதேவேளை கல்முனை உப பிரதேச செயலகம் ஒன்றும் இயங்கி வருகின்றது.

இந்த உப பிரதேச செயலகம் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் ஒரு கடிதத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் அது சம்பந்தமாக அச்சமயம் அமைச்சரவை தீர்மானமோ அல்லது வர்த்தமானி பிரகடனமோ வெளியிடப்படவில்லை.

யுத்த சூழ்நிலை காரணமாக, இயக்கங்களின் உறுப்பினர்கள் பலர் அச்சுறுத்தல்களை மேற்கொண்டு பலவந்தமான முறையிலே இந்த உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமை காரணமாக அன்றிருந்த முஸ்லிம் அமைச்சர் அதேபோன்று பின்பு வந்த அமைச்சர்கள் எல்லோரும் இதனை பேச்சு வார்த்தை ஊடாக தீர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுக்கென வேறு எல்லையுடனான ஒரு பிரதேச செயலகமும் முஸ்லிம் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகமும் உருவாக்கப்பட வேண்டுமென்ற கொள்கை ரீதியான உடன் பாட்டுக்கு வந்திருந்தனர்.

குறிப்பாக இந்த உப பிரதேச செயலகம் ஒரு நிலத்தொடர்பற்ற ரீதியில் இயங்கி வருவதன் காரணமாக பூகோள ரீதியாக பல பிரச்சினைகள், சர்ச்சைகள் காணப்படுகின்றன.

இச்சூழ் நிலையில்தான், ஒரு எல்லையினுடனான இரு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற இணக்கப்பாட்டுக்கு சமூகத்தலைவர்கள் முன் வந்திருந்தனர்.இருந்த போதும் துர்ப்பாக்கியமாக அது நடைபெறவில்லை.

இச்சபையில் திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரன் உரையாற்றிய போது, சில உண்மைகளை கூறியிருந்தார். அதாவது கல்முனை வடக்கு உப பிரதேச செயலக எல்லைக்குள் 3,500 முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். பள்ளிவாசல்கள், அரபுக்கல்லூரிகள் இருக்கின்றன , முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றனவென அவர் கூறியிருந்தார்.

கல்முனையில் இருக்கின்ற தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒரே மொழியை பேசி 4.5 கிலோ மீற்றருக்குள் அடர்த்தியாக வாழ்கின்றமையால் யுத்தகாலத்தில் சுயநல அரசியல் சக்திகளால் மக்கள் பிரிக்கப்பட்டனர். கல்முனையில் பொது நிர்வாகத்தின் கீழ் வாழ முடியாதெனக்காட்டி, ஒரு உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றார்கள்.

பிரிந்திருந்தும் கூட பிரிக்கப்பட்ட உப பிரதேச செயலகத்துக்குள் உள்ள 3,500 முஸ்லிம்களின் விருப்பமில்லாமலே நிர்வாகம் செய்யப்படுகிறது. அங்கு பள்ளி வாசல்கள், முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன. இவை பலாத்காரமான முறையில் உப பிரதேச செயலகத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மக்கள் பாரிய அநீதிக்குட்படுத்தப்பட்டதுதான் வரலாறு.

இவ்வாறு அநீதிக்குட்படுத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக நாம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண விரும்பி 2017 ஆம் ஆண்டு அப்போது பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சராக இருந்த வஜிர அபேவர்தனவின் வீட்டில் இரவு,பகலாக சம்பந்தன், மாவை சேனாதிராஜா,சுமந்திரன் போன்றோருடன் பேசியிருந்தோம்.

அதேபோன்று எல்லையை நிரந்தரமாக பிரிக்கின்றபோது பிரிக்கப்படும் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலக பிரிவில் 3,500-4,000 தமிழ் மக்கள் வாழ வேண்டிவரும். அவ்வாறு வருகின்றபோது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாமென்று நாம் எமது யோசனையை முன்வைத்தோம்.

எவ்வாறு கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவில் 3,500 முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்களோ அதேபோன்று முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலக பிரிவில் 3,500-4,000 தமிழ் மக்கள் வாழ்கின்றபோது இதற்கொரு நிரந்தரமான தீர்வு குறிப்பாக கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் மட்டுமல்லாமல் ஒரு உள்ளுராட்சி சபையும் கிடைக்கும்.

எனவே இவ்வாறான ஒரு தீர்வை முன் வைப்போம் எனக்கூறினோம்.ஆனால், ஒரு தமிழ் மகனும் கல்முனை பிரதேச செயலகத்துக்குள் வாழ முடியாது, இதற்கு உடன்பட முடியாதென்று கூறி, இன ரீதியான ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்பதாகவே யுத்தம் முடிந்த பின்பும் இவர்களின் சிந்தனை இருக்கிறது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்குள் 3,500 முஸ்லிம் மக்கள் வாழ முடியும் ஆனால் தமிழ்மக்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்திற்குள் வாழ முடியாது என்று கூறுவதனால் இன்று அங்கு இரு சமூகங்களையும் அசௌகரியம், மனவேதனைக்குள்ளாக்குகின்ற விடயத்தை தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்டிருக்கின்றன , குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் காரைதீவு பிரதேச செயலகத்தினுள் 40 வீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினுள் 40 வீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எந்தவித பிரிவினைக் கோஷமோ எந்தவித தமிழ், முஸ்லிம் முரண்பாட்டு கோஷமோ இடம்பெறவில்லை.ஆனால் தேர்தல் நெருங்குகின்றபோது கல்முனையில் இவ்வாறான விடயங்களை உரத்து பேசுவதன் ஊடாக இதனை திசைதிருப்ப , அரசியல் ரீதியாக இலாபத்தை அடைய ஒற்றுமையாக வாழும் கல்முனை தமிழ்,முஸ்லிம் மக்களை குழப்பும் முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT