காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலில் இதுவரை இல்லாத பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருப்பதோடு, காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவனையில் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய முற்றுகையில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றுள்ளன.
எனினும் காசாவில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு, நேற்றைய தினத்திலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
அல் ஷிபா மருத்துவ வளாகத்தில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று (01) தனது டாங்கிகள் மற்றும் வாகனங்களை வாபஸ் பெற்றதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த வளாகத்திற்குள் இருந்து பல டஜன் உடல்களை கண்டெடுத்தாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
மருத்துவமனையைச் சூழவுள்ள பகுதிகள் மீது வான் மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வாபஸ் பெறும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக ஹமாஸ் அரச ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த மார்ச் 18 ஆம் திகதி சுற்றிவளைப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. அங்கு ஹமாஸ் போராளிகள் செயற்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் ஹமாஸ் அதனை மறுத்தது.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின்போது அல் ஷிபா மருத்துவமனையில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் திகதி முற்றுகை ஆரம்பித்தது தொடக்கம் மருத்துவமனையில் 21 நோயாளிகள் மரணித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
‘முற்றுகையின்போது அல் ஷிபா மருத்துவமனைக்குள் எம்மால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் இருந்தது’ என்று அந்த மருத்துவமனையில் உள்ள தாதி ஒருவர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். ‘அங்கு பிணவாடை வீசி வருகிறது. எமக்கு நடந்தது விபரிக்க முடியாதது’ என்றும் அவர் கூறினார்.
மருத்துவமனைக்கு தீ வைத்து அதனை முற்றாக செயலிழக்கச் செய்து விட்டே இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து வாபஸ் பெற்றிருப்பதாகவும் மருத்துவ வளாகத்திற்குள் மற்றும் சுற்றி இருக்கும் கட்டடங்களில் ஏற்பட்டிருக்கும் சேதம் பாரியளவில் இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் சில பகுதிகள் தீயினால் சோதமடைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் விபரித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டதாக குறிப்பிட்டிருக்கும் மருத்துவர் ஒருவர் சில உடல்கள் வாபஸ் பெறும் வாகனத்தினால் நசுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்னர் இங்கு ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்தனர். அவர்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.
இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது இஸ்ரேல் கடந்த நவம்பரிலும் தாக்குதல் நடத்தியபோது சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
மறுபுறம் மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனையின் முற்றவெளி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் அந்த மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவின் கட்டளை மையம் ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஆறு மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
காசாவில் 20 வயதான நவாட் கொஹன் என்ற படை வீரர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 600ஐ எட்டியதாக அது குறிப்பிட்டது. இதில் 256 படையினர் காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்டுள்ளனர்.
நெதன்யாகுவுக்கு அழுத்தம்
காசா போர் தொடர்பில் இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று முன்தினம் (31) குடலிறக்க நோய்க்காக அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார். தற்போது அவரது நிலை சீராக இருப்பதாய் ஜெருசலத்தில் உள்ள மருத்துவமனை தெரிவித்தது.
அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைப் பிரதமர் யாரிவ் லெனின் தற்காலிகப் பிரதமராகப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
இந்நிலையில் ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய பாராளுமன்றக் கட்டடத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டமாக ஞாயிறு இரவு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.
ஹமாஸின் பிடியில் இருந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டும் என்றும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.
காசா போர் வெடிப்பதற்கு காரணமான 1,139 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதிய பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியது, காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கத் தவறியது தொடர்பில் நெதன்யாகு அரசு இஸ்ரேலுக்குள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின் போது 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமானது.
முன்னதாக முஸ்லிம்களின் புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் முயன்றபோதும் ரமழானின் பாதிக்கும் அதிகமான நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
‘ஆறு மாதங்களின் பின்னராவது நெதன்யாகு தடையாக இருப்பதை அரசாங்கம் புரிந்து கொள்வது போல் தெரிகிறது’ என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஈவான் மோசஸ் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். இவர் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருக்கும் காடி மோசஸின் மாமனார் ஆவார். ‘அவர் உண்மையில் அவர்களை மீட்டு கொண்டு வர விரும்பவில்லை, அவர் இந்தப் பணியில் தோல்வியடைந்துள்ளார்’ என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலிய பாராளுமன்றத்தை முடக்கிய ஆர்ப்பட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக உறுதி பூண்டுள்ளனர்.
காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் செங்கடல் துறைமுக நகரான ஈலாட்டில் நேற்று வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
இஸ்ரேலின் கிழக்கில் இருந்து அனுப்பப்பட்ட பறக்கும் பொருள் ஒன்று ஈலாட்டில் இருக்கும் கட்டடம் ஒன்றை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. அப்போது அந்த நகரில் சைரன் அபாய ஒலியும் எழுப்பப்பட்டது.
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், தகுந்த ஆயுதத்தை பயன்படுத்தி இஸ்ரேலின் முக்கிய இலக்கு மீது தாக்கதல் நடத்தியதாக குறிப்பிட்டது. இந்த நகர் மீது ஏற்கனவே யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியாவில் உள்ள குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகரில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் 57 வயது சகோதரி சபா அப்தல் சலாம் ஹனியேவை தெற்கு இஸ்ரேலில் வைத்து கைது செய்ததாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெல் ஷெவாவில் இருக்கும் தனது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.