Thursday, April 25, 2024
Home » இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறிய இலங்கை 455 ஓட்டங்களால் முன்னிலை

இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறிய இலங்கை 455 ஓட்டங்களால் முன்னிலை

by sachintha
April 2, 2024 6:30 am 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டபோதும் பங்களாதேஷை விடவும் 455 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

சட்டொக்ராமில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (01) 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குறிப்பாக அபாரமாக பந்துவீச்சிய அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு மற்ற இரு வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதனால் பங்களாதேஷ் அணி 68.4 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதாவது பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 200 ஓட்டங்களை பெறத் தவறியுள்ளது.

ஆரம்ப வீரர் சாகிர் ஹசன் 104 பந்துகளில் பெற்ற 54 ஓட்டங்களுமே அதிகபட்சமாகும். குறிப்பாக அனுபவ வீரர் ஷகீப் அல் ஹசன் 15 ஓட்டங்களுக்கே வெளியேறினார்.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 531 ஓட்டங்களை பெற்றிருந்தது. இது எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் சதம் பெறாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 335 ஓட்டங்களால் முன்னிலை பெற்றதால் பங்களாதேஷ் அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை ஏற்படுத்தும் வகையில் பலொ ஓன் முறையில் இரண்டாது இன்னிங்ஸுக்காக துடு ப்பெடுத்தாட பணிக்க வாய்ப்பு இருந்தது.

என்றாலும் இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாட நேற்று தேநீர் இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கியது. ஆனால் இரண்டாவது ஓவரிலேயே திமுத் கருணாரத்னவின் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி வரிசையாக விக்கெட்டுகளை தாரைவார்த்தது.

இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 25 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது திமுத் கருணாரத்னவுடன் (4), குசல் மெண்டிஸ் (2), தினேஷ் சந்திமால் (9), தனஞ்சய டி சில்வா (1) மற்றும் கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவின்போது அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 455 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருப்பதால் பங்களாதேஷ் அணிக்கு இமாலய ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று (2) போட்டியின் நான்காவது நாளாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT