ஒரு முஸ்லிம் சுவனத்தை அடைவதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அதுவே, தான் பெறுகின்ற உயரிய பாக்கியமெனக் கருத வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். சுவன இன்பங்களை அல்குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. நபித்தோழர்கள் ஓர் ஒப்பற்ற சமூகமாக மாறுவதற்கு, அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் அவர்களது உள்ளங்களில் ஏற்படுத்திய தாக்கமே பிரதான காரணமாகும். ஸஹாபாக்களிடம் காணப்பட்ட, சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசை, எங்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஏற்பட வேண்டும்.
‘சுவர்க்கம் என்பது எமது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஓர் இடம். எந்தக் கண்ணும் பார்த்திராதவற்றை, எந்தக் காதும் கேட்டிராதவற்றை, எந்த உள்ளத்திலும் உதித்திராதவற்றை எனது நல்லடியார்களுக்காக நான் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி).
அது மிகவும் விசாலமானது. ‘நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதிலும் சுவனத்தைப் பெறுவதிலும் முந்திக் கொள்ளுங்கள். அந்தச் சுவனம் வானம் பூமியின் அளவு விசாலமானது (அல் குர்ஆன் 3:133)
சுவன இன்பங்களோடு ஒப்பிடுகின்றபோது இவ்வுலக இன்பங்கள் மிக அற்பமானவை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மறுமையோடு ஒப்பிடுகையில் இவ்வுலகம் உங்களில் ஒருவர் தனது விரலை கடலில் அமிழ்த்தி விட்டு வெளியே எடுப்பதைப் போன்றதாகும். அவ்விரலில் கடலிலிருந்து என்ன வெளிவந்திருக்கின்றது என அவர் நோக்கட்டும்’ என்றுள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
எனவே, ரமழானை முழுமையாக பயன்படுத்தி நோன்பு நோற்று, இரவு வணக்கத்தில் ஈடுபடுவதோடு இஃதிகாபில் தரித்திருந்தும் தொழுகை, துஆ மற்றும் குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட நல்லமல்களின் ஊடாகவும் உயரிய சுவர்க்கத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்