செபம், தபம். உள்ளிட்ட பல்வேறு ஒறுத்தல் முயற்சிகளுடன் 40 நாள் தொடர்ந்த தவக்காலம் நம் ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா வுடன் நிறைவு பெற்றுள்ளது.
மரணத்துக்கு ஓர் அர்த்தம் கொடுக்கவே இயேசு மரணத்தை ஏற்றுக் கொண்டார். சாவு ஒரு முடிவல்ல. அது வாழ்வின் தொடக்கம், முழுமை என்பதை அறிந்தே இயேசு மரணத்தை ஏற்றுக்கொண்டார்.
இன்பத்தைக் கண்டு இறுமாந்து போன சீடர்கள் துன்பத்தைக் கண்டு ஓடினார்கள் (மத். 26:66-75). பயந்து கதவுகளை அடைத்துக் கொண்ட சீடர்கள் மத்தியில் புத்துயிர் பெற்றவராக இயேசு தோன்றினார். அதன் பின்புதான் கோழைகளாக இருந்தவர்கள் தைரியசாலிகளாக மாறினார்கள். பயந்து நடுங்கியவர்கள் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
உயிர்த்த இயேசுவைப் பார்த்தபோது தங்களது பழைய பாவ வாழ்வை புதைத்துவிட்டு புதிய இதயம் பெற்றவர்களாக வாழப் புறப்பட்டார்கள்!
எனவேதான் புனித பேதுரு துணிவோடு சொன்னார், வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள், இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்களே சாட்சிகள் (திப. 3:15-16).
அடுத்து என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது (திப. 4:20) என்றும் வீரத்தோடு சவால் விட்டவர்தான் இந்த பேதுரு.
இயேசுவின் சிலுவைச்சாவு அவருக்கு இழப்பே அல்ல! மாறாக புதிய விடியலுக்கான அடித்தளமானது. சாவின் கொடுக்கையே முறித்துவிட்டார் இயேசு. எனவேதான் பவுல் அடிகளார், “சாவே உன் வெற்றி எங்கே! சாவே உன் கொடுக்கு எங்கே? சாவு முற்றிலும் வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது” (1 கொரி. 15:55) என்று வீர முழக்கமிடுகிறார்.
வாசித்த ஒரு கவிதை! என் மகன் சாகவில்லை என்று தாய் கூறுவதாக இருந்தது. ஒரு பேருந்து பள்ளத்திலே ‘ விழுந்து 34 பேரைக் கொன்றது. அதில் மரகதம் என்பவளின் ஒரே மகன் குமரனும் ஒருவன். இறந்த குடும்பத்திற்கு தலா 50,000 ரூபா நட்ட ஈடு வழங்கும் விழா நடந்தது. ஆளுனர் காசோலையைக் கொடுக்க மரகதம்மாளைப் பெயர் சொல்லி அழைத்தபோது, எனக்குப் பணம் வேண்டாம். என் மகன் குமரன் சாகவில்லை என்றாள். எல்லோருக்கும் புரியவில்லை! ஒருவேளை மகனை இழந்த மனக்கலக்கத்தில் அறிவிழந்து உளறுகிறாளோ என்று எல்லோரும் நினைத்தனர். என்னம்மா! இறந்த இவன்தான் என் மகன் என்று அடையாளம் காட்டினீர்களே என்று சொன்ன போது, மரகதம்மாள் பின்வருமாறு விவரிக்கிறாள்.
“என் மகன் குமரன் பலருக்குப் பல தடவை இரத்ததானம் செய்திருக்கிறான். அது பலருடைய உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு எந்த பிரதி உபகாரமும் எதிர்பாராமல் தன் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்து உயிரைக் காப்பாற்றினான். விபத்தில் இறந்த என் மகனின் கண்களை எடுத்து ஒரு பெண்ணுக்கும், ஒரு சிறுவனுக்கும் பொருத்தியுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் உயிரோடு இந்தக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களில் என் மகன் வாழ்கிறான்!” என்றார் அந்த அம்மையார்.
மரகதம் மேடையை விட்டு கீழே இறங்கியதும் அனைவரும் கண்ணீர் வடித்து அந்த அம்மாவின் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆம்! வரலாற்றில் பிறருக்காக உயிர் கொடுத்தவர்கள் உயிர்த்துக் கொண்டும், உயிர் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதற்குத் தகுந்த சான்று இது! தனக்காக வாழ்பவன் இறப்பான். அவன் கல்லறையிலே அடங்கி ஒடுங்கிவிடுவான். ஆனால் பிறருக்காக இறப்பவன் வாழ்வான். மனிதர்களின் உள்ளறைகளிலே வாழ்வாக உயிர்ப்பான்.
சாவைச் சாகடித்தார் இயேசு! அதன் விளைவுதான் வெறுமை யான கல்லறை. கல்லறை வெறுமையாகி சாவுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. அதிகாலையில் இயேசுவின் உடலைக் காணச் சென்ற பெண்கள், வெறுமையான கல்லறையைத்தான் கண்டார்கள்.
கலக்கமும், குழப்பமும் அடைந்த அந்தப் பெண்களை நோக்கி, உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவானேன். அவர் இங்கு இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் (லூக். 24:5) என்று வானதூதர்கள் அறிவித்தார்கள்.
வெறுமையான இயேசுவின் கல்லறை நமக்கு மூன்று சிந்தனைகளைத் தருகிறது:
முதலாவதாக, இயேசு நம்முடன் உயிரோடு இருக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு நமக்கும் உயிர்ப்பு உண்டு என்ற நம்பிக்கையைத் தருகிறது. ஏழ்மை, அநீதி, தீவிரவாதம் போன்ற தீய சக்திகளை அழித்து, நீதி, உண்மை, அன்பு, அமைதியில் வாழ, வளர, வழிகாட்ட அழைப்பு விடுக்கிறது.
இரண்டாவதாக, நாமும் நம்மை வெறுமையாக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகிறது. இதனால் உலகம், அதில் உள்ள அனைத்தும் நிலையற்றவை, அழிவுக்குரியவை என்பதையும் பணம், பதவி, பொறாமை, தற்பெருமை, ஆசை இவைகளுக்குச் சாவு மணி அடிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மூன்றாவதாக, வெறுமையான கல்லறை நாம் உறுதியுடன், தைரியமாக உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சிகளாக வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
உயிர்த்த ஆண்டவர் இயேசு சீடர்களை நோக்கி, உங்களுக்குச் சமாதானம். அஞ்ச வேண்டாம் என்றுதான் உரைத்தார். கோழைகளாக அல்ல. மாறாக புனித பேதுருவுடன் நாமும் இணைந்து இயேசு உயிர்த்துவிட்டார், அவருக்கு நாங்களே சாட்சிகள் (தி.ப. 5:32) என்று சாட்சிய வாழ்வு வாழ இந்த வெறுமையான கல்லறை அழைப்பு விடுக்கிறது.
இயேசு எங்கே உயிர் வாழ்கிறார்?
மனித உறவுகளில், மன்னித்து சகோதர வாஞ்சையோடு வாழும்போது அங்கே இயேசு உயிர் வாழ்கிறார்.
ஆதிக் கிறிஸ்தவர்களைப்போல, பகிர்ந்து வாழும் இடங்களில் இயேசு உயிர் வாழ்கிறார். சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யும்போது இயேசு அங்கே உயிர் வாழ்கிறார்.விசுவாசம் கொண்ட திருத்தூதர்களைப்போல நாமும் “விசுவாச வாழ்வு வாழும்போது அங்கே இயேசு உயிர் வாழ்கிறார்.அநீதியை ஒழித்து, நீதியை நிலைநாட்டும்போது அங்கே இயேசு உயிர் வாழ்கிறார். இறக்காத வரை உயிர்ப்பு இல்லை. இன்னல்களைச் சந்திக்காத வரை இம௰ங்களைத் தொட முடியாது. சறுக்கி விழாமல் சாதிக்க முடியாது. ஏனெனில் மடியும் விதைதான் மரமாகும், உடையும் கற்கள்தான் சிற்பமாக முடியும். உதிரும் இலைதான் உரமாகும்
அருட் பணி முனைவர் அருள்