மௌலவி இப்ராஹீமின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா அனுதாபம்
நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கு தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல் இப்ராஹீமின் பணி முன்மாதிரிமிக்கது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்மார்க்க அறிஞரும் சிந்தனையாளருமான மௌலவி இப்ராஹீமின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாவின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பேராதனை, களனி பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய அரபு கற்கை துறைகளில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணிபுரிந்ததோடு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராக பணிபுரிந்து அவ்வமைப்பை உயர் இடத்திற்கு கொண்டு வந்தார். மௌலவி இப்ராஹீமின் பணியில் அவரினால் ஆரம்பிக்கப்பட்ட தன்வீர் அகடமி மிக முக்கியமானது . சிங்கள மொழியில் மௌலவிகளை உருவாக்குகின்ற அந்த அகடமி இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தன்வீர் அகடமி மௌலவி இப்ராஹீமின் 7 தசாப்த சேவையின் அடையாளமாக அமையும் . மௌலவி இப்ராஹீமின் அளப்பரிய சேவைகளை கௌரவிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அதன் 22வது வருடாந்த மகாநாட்டில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்ததை நாங்கள் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றோம்.
மௌலவி இப்ராஹிமின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது மறுமை வாழ்வுக்காக சகலரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.