புத்த பெருமானின் புனித கபிலவஸ்து சின்னங்கள் தாய்லாந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
26 நாட்களின் பின்னர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த சின்னங்கள் விமானப்படை விமான நிலையத்தில் நடைபெற்ற விஷேட வைபவத்தில் இந்திய வெளிவிவகார மற்றும் கலாசார இராஜாங்க அமைச்சர் மீனாட்சி லேகி தலைமையில் முழு அரச மரியாதையோடு ஏற்கப்பட்டு தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னரின் பிறந்த தினத்தின் நிமித்தம் கபிலவஸ்து சின்னங்களை தாய்லாந்தில் காட்சிப்படுத்தவென அந்நாட்டு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்திய மத்திய கலாசார அமைச்சு அனுமதி அளித்து அனுப்பி வைத்தது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் தாய்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த கபிலவஸ்து சின்னங்கள் அங்கு முழு அரச மரியாதையோடு வரவேற்கப்பட்டதோடு பல்வேறு பிரதேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இலட்சக்கணக்கான தாய்லாந்து பௌத்த மக்கள் புனித கபிலவஸ்து சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த கபிலவஸ்து சின்னங்கள் கி.மு 04 ஆம் 05 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகும். இந்தியாவின் தொல்லியல் துறையினர் 1970களில் கபிலவஸ்துவின் பண்டைய நகராகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தின் சித்தார்த் நகருக்கு அருகிலுள்ள பிப்ரஹ்வாவில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.