Thursday, April 25, 2024
Home » அகில இலங்கை சிறு சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் நாஜிம் கௌரவிப்பு
தினகரனின் 92ஆவது பிறந்த தின நிகழ்வில்...

அகில இலங்கை சிறு சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் நாஜிம் கௌரவிப்பு

by sachintha
April 2, 2024 7:41 am 0 comment

தினகரனின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வு லேக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது. தினகரன் பத்திரிகையுடன் நெருங்கிப் பயணிக்கும் சமூகப் பணியாளர்களும், நீண்ட காலம் ஊடகத்துறையில் பணியாற்றிய ஊடகத் துறை சார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சபைத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் முன்னிலையில் தினகரன் , தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தானபனத்தின் ஆலோசகர் ஹாசிம் உமர், லேக் ஹவுஸ் வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நீண்ட கால ஊடகப் பணியாற்றியவர்களில் , இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் சி. பி. எம் சியாம், பி. பாலசிங்கம், பி. இக்மன் பிரியங்க, எம். ஏ. எம்.தாஜுதீன், ஆனந்தி பாலசிங்கம், எம். எம். ஐ. ரஹ்மான் உள்ளிட்டவர்கள் தினகரன் 92 ஆண்டு நினைவுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது தேசமானிய எஸ் முத்தையா, தேசமானிய பி. பழனியப்பன்,, தேசமானிய டப்லிளியூ. எம். எம். எஸ்.எம். கமால்தீன், பி. குமாரதாஸ், எம். சுந்தரமூர்த்தி, டப்லிளியூ எம். என். நாஜிம், தேசமானிய வி. சிதம்பரநாதன், எம். எஸ்.எம். பாஹிம். ஏ. பி.எம். ஹுஸைன், அவ்லர்டீன் முஹமட் அனஸ், நந்தினி மனோகரன், வைத்தியர் எச். எம். ஏ. தி.எம். விஜயசேகர, வைத்தியர் கே. தி. என். பிரசாத் ரனவீர. நடேசன் நாகேந்திரன், திருமதி சஹானா இன்பராசா, மோகனதாஸ் திபாகர், எழுத்தாளர் வணபிதா சரவணமுத்து பெனடிக் (பெனி) ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அகில இலங்கை சிறு சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டப்ளியூ. எம். என். நாஜிம் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.

உங்களுடைய ஆரம்ப வாழ்க்கை பற்றி ?

தந்தை பெயர் குருகொடவிதானலாகேதர யூசுப்லெப்பை வஹாப்தீன். தந்தையின் பூர்விகம் கும்புக்கந்துர. தாய் மடவளை. அலி உதுமானாலாகெதர சஹிரா பீபி. என் சகோதரர் பண்டாரவளையில் தொழில் செய்தார். அவர் என்னையும் அங்கு தொழில் செய்வதற்காக அழைப்பு விடுத்தார். 1983 களில் ஜூலைக் கலரவம் நிகழ்ந்த கால கட்டத்திற்குப் பிறகு பண்டாரவளையில் பதுரியா ட்ரேடர்ஸ் என்ற கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். குவைட் செல்லும் மட்டும் அந்தக் கடையில் வேலை செய்யுமாறு என் சகோதரர் அறிவுறுத்தல் விடுத்து விட்டார்.

1983 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் குவைட் நாட்டுக்குச் சென்று 1987 களில் இறுதிப் பகுதியில் மீளவும் நாட்டுக்கு திரும்பி வந்து விட்டேன். சிறியளவில் ஒரு சில்லறை வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தேன். அந்த தொழிலின் மூலமே என்னை வளர்த்துக் கொண்டு ஓர் உச்ச நிலையை அடைந்துள்ளேன். குவைட் நாட்டில் நான் கற்ற அனுபவம்தான் பிற்காலத்தில் சிறந்த ஒரு வர்த்தகராக வளர்வதற்கு வழிவகுத்தன என்று கூறலாம்.

எனக்கு நான்கு ஆண் பிள்ளைகள். அவர்களை நன்கு படிப்பித்துள்ளேன். அதே போன்று அவர்களுக்கு உரித்தான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். என்னுடைய வியாபாரம் எவையோ அவற்றை எனது பிள்ளைகளும் கற்று வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். கட்டிட நிர்மாணத்துறை சார்ந்த வியாபாரத் தொழிலையும் மற்றும் யூடிஏ சுப்பர் மார்க்கட் என்ற பெயரில் கண்டி வீதியிலும் மற்றுமொன்றை வத்துகாமம் வீதியில் அதே பெயரில் இரு மகன்மார்கள் நடத்தி வருகின்றார்கள். பிரிமா சந்தைப்படுத்தலை ஆக மூத்த மகனும் நானும் சேர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சுமார் 100 பேர் அளவில் எங்களிடம் ஊழியர்கள் தொழில் புரிகின்றார்கள். அத்துடன் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

நீங்கள் எத்தகைய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள்?

ஊரில் பல்தரப்பட்ட சமூகப் பணியாளர்களுடன் சேர்ந்து நீண்ட காலமாக சமூகப் பணிகளையும் ஆற்றி வருகின்றேன். அதே போன்று இந்த நாட்டின் சில்றை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றேன். அகில இலங்கை ரீதியில் இந்த நாட்டில் சில்லறைக் கடை வியாபாரிகளின் தேவை நலன்கருதி அமைக்கப்பட்ட சங்கம் ஒன்று. அதில் ஆரம்பத்தில் சாதாரண உறுப்பினராகச் சேர்ந்தேன். அதிலே நீண்ட நாள் பயணம் செய்து தற்போது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாறி மாறி வரக் கூடிய அரசாங்களினால் வரக் கூடிய இன்னல்கள் பிரச்சினைகள் மற்றும் சில்லறைக் கடைகளில் அறவிடக் கூடிய வரிகள், இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்குரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றேன்.

வர்த்தகத் துறை அமைச்சர் , நிதி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து எங்களிடையே இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இப்படி பொதுவான சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

நீங்கள் ஊரில் ஆற்றுகின்ற சமூகப் பணி என்ன?

எங்கள் ஊரில் 17 தைக்காப் பள்ளிவாசலுக்கு ஒரு ஜும்ஆப் பள்ளி வாசல் என்று இருக்கிறது. அந்த ஜும்ஆப் பள்ளிவாசலின் ஊடாக எங்களால் முடிந்த சமூகப் பங்களிப்பை ஆற்றி வருகின்றோம். அதன் தற்போதைய தலைவராக நான் கடமையாற்றி வருகின்றேன்.

ஊரிலுள்ள சமூக நலப் பணிகளில் பங்கேற்பதுடன் தம் பிரதேசத்தின் சகவாழ்வு நல்லிணக்கம் ஒற்றுமை போன்ற விவகாரங்களுக்காகவும் மற்றும் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி நடடிவடிக்கைகளுக்காகவும் பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஊடாக அரும்பணியாற்றி வருகின்றேன்.

குறிப்பாக எமது பிரதேசத்தில் சமூகப் பணிகளை ஆற்றி வருகின்ற சஹீட் எம். ரிஸ்மி எனது பாடசாலை நண்பன். அந்த நாள் முதல் இன்று வரையும் அவருடன் சேர்ந்து சமூகப் பணியாற்றி வருகின்றேன். அவரின் பின்னால் சென்று உள்ளுர் மட்டத்தில் பேசப்படக் கூடிய பிரபல்யங்களுடன் மட்டுமல்ல தேசிய மட்டத்தில் காரிய கருமங்கள் ஆற்றக் கூடிய வகையிலான சமூகப் பங்களிப்புக்களையும் செய்து வருகின்றேன்.

நிறையத் தேடல்கள் இருந்தமையினால்தான் நிறைய சமூகப்பணிகளையும் செய்யத் தொடங்கினேன். பாடசாலையில் கிடைத்த அனுபவங்களோடு வெளியே கிடைத்த அளவுக்கு அதிகமான அனுபவங்களோடு இந்தப் பயணத்தை மேற் கொண்டு செல்லுகின்றேன்.

வகுப்பு நண்பர் என்று வரும் போது ஏ. ஏ. எம். ஜாபீர். அவர் சர்வதேச பாடசாலையின் அதிபராகவும் ஒரு இஸ்லாமிய மார்க்கப் பணியின் பிரசாரகராகவும் மடவளையில் உள்ளார். அடுத்து சஹீட் எம். ரிஸ்மி. அவர் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர். அப்படியென்றால் அவர்களுடைய சமூகப் பங்களிப்பைப் பற்றி நான் பெரிதாகக் கூறத் தேவையில்லை. உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர் ஒரு நாடறிந்த சமூக சேவையாளர். இப்படி பல பேர் உயர்ந்த துறைகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்துவமான தன்மையுடன சிறந்து விளங்குகின்றார்கள். உலமாக்கள் இருக்கின்றார்கள். பொறியியலாளர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு துறைகளிலும் உயர்ந்த நிலையில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று நீங்கள் சிறு சில்லறைக் கடை வர்த்தகத்தில் ஒரு முன்மாதரியாகத் திகழுகின்றீர்கள். அந்த வகையில் இளம் புதிய சில்லறைக் கடை வர்த்தகர்களுக்கு எத்தகைய ஆலோசனைகளை முன் வைக்க விரும்புகின்றீர்கள்,

இளம் தலைமுறையினர்கள் வர்த்தகத் துறையில் ஆக உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் எனில் கட்டாயம் கல்வி அவசியம். அவர்கள் கல்வி கற்று இருத்தல் வேண்டும். வர்த்தக ரீதியிலான கல்வியைக் கற்று சமகாலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாய் இருத்தல் வேண்டும். வியாபாரத் துறைக்கு வெறுமனே அனுபவம் மட்டும் போதாது கல்வியும் சேர்ந்து இருக்குமாயின் உயரிய அந்த உயர்ந்த இலக்கை அடையலாம் என்பதுதான் என்னுடைய கருத்தாகும்.

உங்களது யூடிஎஸ் சுப்பர் மார்கட் கடையைப் போன்று ஏனைய பிரதேச மக்களும் பயனளிக்கும் வகையில் ஒரு சங்கிலித் தொடர் அமைப்பில் கிளை நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கு திட்டங்கள் இல்லையா?

உண்மையிலேயே நல்லதொரு கேள்வி. பிள்ளைகளிடத்தில் அந்த ஆர்வம் இருந்தால் அவர்களுக்கு வழிகாட்டலாம். இவை முடியாத காரியம் அல்ல. குறிப்பாக இந்தச் சிந்தனையினை நானும் சஹீட் எம். ரிஸ்மியும் கொழும்புக்கு பயணம் செல்லும் போது அடிக்கடி பகிர்ந்து கொள்வோம். நாங்கள் இருவரும் வெளிநாடுகளில் இருந்தவர்கள். அவர் சவூதி அரேபியாவில் உள்ள சுப்பர் மார்க்கட் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார். இதன் போது இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப மடவளையில் வர்த்தகத் துறையில் மாற்றம் இல்லை. புதிய சுப்பர் மார்க்கெட் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சஹீட் எம். ரிஸ்மி அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொள்வார். அவர் எந்த விடயத்திலும் மாற்றங்களை விரும்பக் கூடியவர். அவர் வியாபார விடயத்திலும் அவை குறித்து என்னிடம் முன் வைத்தார்.

எந்த துறையாக இருந்தாலும் புதிய திருப்பங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சஹீட் எம். ரிஸ்மி விரும்புகின்றவர். வியாபாரத் துறையிலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நவீன யுத்திகள் கையாளப்பட வேண்டும் என்று அடிக்கடி பேசுவாh. அவருடைய கருத்தை உள்வாங்கி எனது மூத்த மகனிடம் இந்தச் சிந்தனையை விதைத்தேன். அதாவது விலையை சுவையுங்கள் என்ற கருத்தைக் கூடப் பகிர்ந்து கொண்டோம்.

நேர்காணல் இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT