உடப்பு ஆண்டிமுனையிலுள்ள ஊற்றடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பாடசாலையை ஆரம்பித்தவரும், அதன் அதிபராகப் பணிபுரிந்தவருமான கந்தையா தொண்டமான் அவர்கள் ஓய்வு பெற்றுச் செலவதை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு அப்பாடசாலையில் அதிபர், ஆசிரியர், மற்றும், பெற்றோர் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிபர் எஸ்.கோகிலகாந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.பாடசாலை சிறார்களினால் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு ஸ்தாபக அதிபர் தனது பாரியார் சகிதம் பாடசாலைக்கு வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.இதன் போது அவரது மார்பளவு சிலை ஒன்று அதிபர் காரியாலய முன்றலில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இதனை புத்தளம் வலயக் கல்விப் பணிமனை பணிப்பாளர் ஏ.எச்.எம்.அர்ஜுன திறந்து வைத்தார்.மேலும் கல்விப் புலத்தில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் தொழிலதிபர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.அத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் நினைவுச்சின்னமும், வழங்கி வைக்கப்பட்டது. மேலும் ‘தொண்டமாநாதம்’என்னும் சேவை நலன் பாராட்டு விழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.இதன் முதல் பிரதியை வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.அர்ஜுன பெற்றுக் கொண்டார்.மேடையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுஜிவீகா சந்திரசேகர, ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் இஸற்.ஏ.சன்ஹீர், பாட இணைப்பாளர் அருணாகர, இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ.கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே. மகாதேவன்…
(உடப்பு குறூப் நிருபர்)