களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ளூர் மற்றும் வெளியூர் உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் மாதிரி வன கிராமமொன்று (model Forest Village) அமைக்கப்படவுள்ளது. வனபாதுகாப்புத் திணைக்களத்தினால் பேணப்படும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இத்தகொட ரன்வலாகல அரச வன பிரதேசத்தை மையமாகக் கொண்டு மேற்படி மாதிரி வன கிராமம் அமைக்கப்படவுள்ளது.
இந்த வன மாதிரிக் கிராமம் அமைப்பது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநுப பஸ்குவல் தலைமையில் மத்துகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
உள்ளூர் மற்றும் வெளியூர் உல்லாசப் பயணிகளுக்கு உகந்ததாக இந்த வன பிரதேசத்தை அமைத்து, உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கி மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இராஜாங்க அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் துறைசார்ந்த அதிகாரிகள், ஸ்ரீலங்கா உல்லாப் பயண ஹோட்டல் மற்றும் முகாமைத்துவ நிறுவன தலைவர் சிரன்த பீரிஸ், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ரன்வலாகல என்பது மலையொன்றில் அமைந்துள்ள அரசினால் பேணப்படும் காட்டு வளமாகும். இந்த மலையானது அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு எல்லையாகவும் அமைந்துள்ளது.
ரன்வலாகலவைச் சுற்றியதாக உல்லாசப் பயணிகளைக் கவரக் கூடிய இடங்களும் உல்லாசப் பயண இல்லங்களும் அமைந்துள்ளன. இந்த முழுப்பிரதேசமும் அழகான சுற்றுச் சூழலைக் கொண்டுள்ளது.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான அநுப பஸ்குவல் இந்த வேலைத்திட்டத்துக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பிரதேசத்துக்கு உரித்தான விஷேட நோக்குகளை முன்னிலைப்படுத்தி, மாதிரி வன கிராமத்துக்கான உல்லாசத் திட்ட முறைமைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்…
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)