Monday, April 22, 2024
Home » காஸா யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு இலங்கை நிதியுதவி

காஸா யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு இலங்கை நிதியுதவி

by sachintha
April 2, 2024 6:00 am 0 comment

காஸா மீதான யுத்தம் காரணமாக அங்குள்ள சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸாவை சுடுகாடாக்கி இருக்கிறது யுத்தம். இந்த யுத்தத்தின் கொடூரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

ஐந்து மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் இந்த யுத்தத்தின் விளைவாக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர். அத்தோடு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். அத்தோடு காஸாவிலுள்ள பொதுக்கட்டடங்கள், மக்கள் குடியிருப்புக்கள், முகாம்கள், நலன்புரி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் தாக்குதல்களுக்கு இலக்காகி சேதமடைந்தும் அழிவுற்றும் உள்ளன. 23 இலட்சம் மக்களைக் கொண்ட காஸாவில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். அவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களிலும் கூடாரங்களிலும் தங்கியுள்ளனர்.

இந்த யுத்தம் காஸாவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும் நெருக்கடிகளும் உலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இவ்வாறான சூழலில் மனிதாபிமானத்தை நேசிக்கும் இலங்கையர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஸாவில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன்களில் விஷேட கவனம் செலுத்தியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு காஸா மீதான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அங்குள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலையொன்றை அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் காஸா மீதான யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நலன்களுக்கு செலவிடவென ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் திரட்டி வழங்குவோம் என கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்ப காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன சிறுவர்களுக்கு நிவாரணம் அளிப்பதை நோக்காகக் கொண்டு காஸா சிறுவர்களுக்கான நிதியமொன்றை அமைப்பதற்கான யோசனையை அமைச்சரவைக்கு ஜனாதிபதி சமர்ப்பித்தார். அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததோடு, நிதியமும் ஸ்தாபிக்கப்பட்டது. அத்தோடு அமைச்சுக்கள், அரச நிறுவனங்களுடன் இணைந்து இம்முறை ரமழான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்படும் நிதியை காஸா சிறுவர்களின் நலன்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக் கொண்டனர். அத்தோடு பொதுமக்களது பங்களிப்பும் இந்நிதியத்திற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் நிமித்தம் தனியான வங்கிக் கணக்கொன்றையும் ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

காஸா குழந்தைகளின் நலன்களுக்காக நிதி அன்பளிப்புகளை அளிக்க விரும்பும் நன்கொடையாளர்கள் ஏப்ரல் 11 ஆம் திகதிக்குள் அவற்றை நிதியத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக் கொண்டது.

அந்த வகையில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் வேண்டுகோளை ஏற்று அரச தனியார் நிறுவனங்கள் இம்முறை இப்தார் நிகழ்ச்சிக்காக செலவிடவிருந்த பெருந்தொகை நிதியை இந்நியதித்திற்கு வழங்கிய​தோடு, மனிதநேயத்தில் அக்கறை கொண்டுள்ள நன்கொடையாளர்களும் இந்நிதியத்திற்கு நிதி அன்பளிப்புக்களை வழங்கத் தவறவில்லை.

இவ்வாறு காஸா சிறுவர்களின் நலன்களுக்காக ஜனாதிபதி ஏற்பாட்டில் திரட்டப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹமீதல்லாஹ்விடம் நேற்று கையளித்தார்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கை மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த யுத்தத்தின் விளைவாக காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களும் குறிப்பாக சிறுவர்களும் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அங்கு பஞ்சமும் பட்டினியும் போஷாக்கின்மையும் பெருந்தொகையான சிறுவர்களைப் பாதித்துள்ளதாக ஐ.நா. நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அவை உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன.

இவ்வாறான சூழலில் காஸாலுள்ள சிறுவர்களின் நலன்களுக்காக நிதியம் அமைத்து நிதி திரட்டி இலங்கை ஜனாதிபதி உதவி இருப்பது அந்த மக்களுக்கு ஒரு நிவாரணமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். அத்தோடு ஜனாதிபதியின் இந்நடவடிக்கை இந்நாட்டு வரலாற்றிலும் பலஸ்தீன மக்களின் வரலாற்றிலும் தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

காஸா பிள்ளைகளதும் அங்குள்ள மக்களதும் நலன்கள் மீது ஜனாதிபதி கொண்டுள்ள அக்கறையை இந்நடவடிக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேநேரம் பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு தீர்வை வலியுறுத்திவரும் இலங்கை காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி வருவதோடு அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளது. மனிதநேயத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் யுத்தத்தை வெறுக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT