மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரி கொண்டு இயங்கும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமான அமானா வங்கி, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் (களுபோவில வைத்தியசாலை) குழந்தைகள் மற்றும் சிறுவர் உளவியல் சிகிச்சை பிரிவை மறுசீரமைப்பு செய்திருந்தது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு சிகிச்சைகளை வழங்கும் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகளில் ஒன்றான இந்த பிரிவின் மறுசீரமைப்புத் திட்டத்தில், வர்ணம் பூசல் மற்றும் அத்தியாவசிய தளபாடங்கள் மற்றும் சாதனங்களை வழங்கல் போன்றன அடங்கியிருந்தன. இந்த மேம்படுத்தல்கள் நோயாளர்களுக்கு நட்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன், உளவியல் சுகாதார ஆதரவை எதிர்பார்க்கும் நபர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த வர்ணம் தீட்டும் செயற்பாட்டில் வங்கியின் ஊழியர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், சமூக ஈடுபாட்டில் அமானா வங்கியின் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட சிகிச்சைப் பிரிவை வைத்தியசாலை அதிகாரத் தரப்பினரிடம் மீள ஒப்படைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் உதவி உப தலைவர் ராஜேந்திர ஜயசிங்க, சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி அசீம் ராலி, OrphanCare இன் தலைமை அதிகாரி அசாத் சஹீத், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். சிந்தா குணரட்ன மற்றும் சிகிச்சைப் பிரிவின் பிரதான உளவியல் வைத்திய நிபுணர் வைத்தியர். அனுராதா ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
களுபோவில வைத்தியசாலையுடன் அமானா வங்கி 2006 ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக பேணும் பங்காண்மையின் அங்கமாக இந்த மறுசீரமைப்பு செயற்பாடு அமைந்துள்ளது. அப்போது முதல், வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவை பேணும் செயற்பாடுகளில் வங்கி தன்னை ஈடுபடுத்தியுள்ளதுடன், தளபாடங்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அவசியமான மறுசீரமைப்புகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு அவசியமான அத்தியாவசிய ஆதரவை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் உதவி உப தலைவர் ராஜேந்திர ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “களுபோவில வைத்தியசாலையுடன் இணைந்து, உளவியல் சுகாதார பராமரிப்பு வசதிகளை மேம்படுத்த முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். சிறுவர் மற்றும் குழந்தைகள் உளவியல் சுகாதார சிகிச்சைப் பிரிவை மறுசீரமைப்பு செய்ததனூடாக, குணமடைதலுக்கு ஆதரவான சூழலையும், நோயாளர்களின் நலனை உறுதி செய்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். களுபோவில வைத்தியசாலையுடன் நாம் கொண்டுள்ள நீண்ட கால பங்காண்மையினூடாக, சிறுவர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான எமது அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்தத் திட்டம் தொடர்பாக சிறுவர் மற்றும் குழந்தைகள் உளவியல் சுகாதார சிகிச்சைப் பிரிவின் பிரதான உளவியல் சிகிச்சை நிபுணர் வைத்தியர். அனுராதா ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், “களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் குழந்தைகள் உளவியல் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் அமானா வங்கியின் பங்களிப்பை நான் வரவேற்பதுடன், நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறுவர்களுக்கு நாம் பராமரிப்பின் தரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இது அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.