பாலமுனை ஹிறா நகர் மீள்குடியேற்றக்கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நள்ளிரவு வேளைகளில் கிராமத்துக்குள் புகும் யானைகள் வீட்டுத்தோட்டத்திலுள்ள தென்னை, மா, பலா, வாழை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்களை துவம்சம் செய்து வீட்டு சுற்றுப்புறச் சுழலிலுள்ள பயன்தரும் மரங்கள், பயிர்கள் என்பவற்றை அழித்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாலமுனை ஹிறாநகருக்கு அண்மையில் காணப்படும் மலைப் பிரதேச காட்டுப்பகுதி மற்றும் ஒலுவில் திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் போன்ற இடங்களுக்கு நாளாந்தம் உணவு உண்ணுவதற்காக வரும் காட்டு யானைகளே இவ்வாறு மக்கள் குடியிருப்பு பிரதேசங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்து அட்டகாசம் செய்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பொதுமக்களின் உயிர் உடைமைகள் மற்றும் வீட்டுத்தோட்ட வாழ்வாதார பயிர்கள் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)