ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிற்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னாலுள்ளவர்களை தனக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.இதையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஐந்து மணிநேரம் மைத்திரி வாக்குமூலம் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் இது குறித்த வாக்குமூலங்களை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஐ.எம்.இமாம் தலைமையிலான விசாரணைக்குழுவே இந்த அழைப்பை விடுத்துள்ளது.
விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ். மனோகரன், இது தொடர்பான எழுத்துமூல அழைப்பை கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆணைக்குழு 2023 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்ட செனல் 04 காணொளியில், வெளிப்படுத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தகவல்களையும் விசாரித்து வருகிறது.