Saturday, May 25, 2024
Home » முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ஓட்டங்களைப் பெற்று ஆதிக்கம்

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ஓட்டங்களைப் பெற்று ஆதிக்கம்

by damith
April 1, 2024 6:00 am 0 comment

ஆறு வீரர்களின் அரைச்சதத்துடன் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்கு 531 ஓட்டங்களை குவித்தது. இதில் முதல் ஏழு வீரர்களில் அஞ்சலோ மத்தியூஸ் தவிர அனைவரும் ஐம்பதுக்கு மேல் ஓட்டங்களை பெற்றதோடு குசல் மெண்டிஸ் (93) மற்றும் கமிந்து மெண்டிஸ் (ஆட்டமிழக்காது 92) இருவரும் சதத்தை தவறவிட்டனர்.

துடுப்பாட்டத்திற்கு சாதகமான சட்டொக்ராம் மைதானத்தில் நேற்று முனத்தினம் (30) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட திருமானித்த இலங்கை அணி ஆடுகளத்தின் சாதக நிலையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது.

ஆரம்ப வீரர்களான நிஷான் மதுஷங்க (57) மற்றும் திமுத் கருணாரத்ன (86) முதல் விக்கெட்டுக்கு 96 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதோடு பின்னர் வந்த வீரர்களும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் நாளில் குசல் மெண்டிஸ் 150 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 93 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் 314 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி தனது ஓட்டங்களை மேலும் அதிகரித்துக் கொண்டது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (70) மற்றும் தினேஷ் சந்திமாலும் (59) அரைச்சதம் பெற்றனர்.

எனினும் மீண்டும் ஒருமுறை சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் தொடர்ச்சியாக மூன்றாவது சதத்தை பெறுவதை எட்டு ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தபோதும் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டும் பறிபோனது.

167 பந்துகளுக்கு முகம்கொடுத்த கமிந்து மெண்டிஸ் 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவிட் மியன்டாட் சாதனையை சமன் செய்தார்.

மியன்டாட் 1976இல் தனது முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 419 ஓட்டங்களை பெற்ற நிலையில் கமிந்துவும் தனது நான்கு இன்னிங்ஸ்களிலும் அதே ஒட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 159 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் பங்களாதேஷ் சார்பில் ஷகீப் அல் ஹஸன் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் நேற்று தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி ஆட்ட நேர முடிவின்போது 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்ப வீரர் மஹ்மூத் ஹசன் ஜோய், லஹிரு குமாரவின் பந்துக்கு 21 ஓட்டங்களில் போல்டானார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT