Monday, April 22, 2024
Home » நரகிலிருந்து பாதுகாப்பு தேடுவோம்

நரகிலிருந்து பாதுகாப்பு தேடுவோம்

by damith
April 1, 2024 11:00 am 0 comment

அல்லாஹ்தஆலா இவ்வுலக வாழ்வில் நற்செயல்கள் புரிபவர்களுக்கு மறுமையில் அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக சுவர்க்கத்தையும் தீயவைகளை புரிபவர்களுக்கு தண்டனையாக நரகத்தையும் படைத்துள்ளான்.

நரகம் என்பது வேதனைகளும் தண்டனைகளும் நிறைந்த கொடூரமான இடம். அதிலிருந்து பாதுகாப்பு தேடுமாறு அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஏவியுள்ளார்கள். அல்லாஹ் அவனது திருமறையில் ‘முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கற்களுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:6)

‘இன்னும், யார் வரம்பு மீறுவாரேர் தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அவரை இவ்வாறுதான் தண்டிப்போம். இன்னும், (அவனுக்கு) மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும். (20:127)

நரகத்தின் தண்டனை மிகக் கடுமையானது. அதன் நெருப்பிற்கு முடிவு கிடையாது என்று அல்லாஹ் பல வசனங்களில் குறிப்பிட்டுள்ளதோடு நரகத்தை பயந்து கொள்ளுமாறும் சுட்டிக்காட்டியுள்ளான். நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு நாளும் சுபஹ் மற்றும் மஃரிப் தொழுகைக்கிடையில் ஏழு தடவைகள் நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறே ஒவ்வொரு ஜூம்ஆவிலும், பிறகு தங்களுடைய எல்லா பிரச்சாரங்களிலும். தங்களுடைய தோழர்களுக்கு நரகத்தை குறித்த பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆகவே, ரமழானின் மிக முக்கியத்துவம் மிக்க இறுதிப்பத்தை அடைந்துள்ள நாம் நரக வேதனையில் இருந்து அதிகமதிகம் பாதுகாப்பு தேடுவோம்.

முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் (காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT