ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளிலிருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக பதவி வகித்த அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவே, ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர: கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி கூட்டத்தின் இறுதியில் எம்மை கட்சியில் இருந்து நீக்குவதற்காக தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு நான்கில் ஒருபகுதியினர் கூட கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.எங்கள் கருத்துக்களை தெரிவிக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிப்புக்கு மத்தியில் அவர் வெளியேறினார். இது முற்றிலும் சட்டவிரோதமான நீக்கம். ஒரு குற்றச்சாட்டு கூட முறையாக இல்லை. இந்த நாட்களில், அவரது நடத்தை பற்றி எங்களுக்கு கேள்வி உண்டு. அவர் பேசும் கதைகளில் பிரச்சினைகள் உள்ளன . முன்னாள் ஜனாதிபதிக்கு ஏதோ மன நல பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது.
இதேவேளை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பேசுகையில்,
என்னை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, கூட்டணியை அமைக்கும் விடயத்தில் நான் சரியாக செயல்படவில்லை என்பதுதான்.
இந்தக் கூட்டணிகளை உருவாக்கிய அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ள பிரச்சினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரின் தலைமைத்துவத்தை சபைக்குள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பிரச்சினை மாத்திரமே. அதற்கு என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை.
இன்று விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற சிறப்புக் கூட்டத்தில் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாதென்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும்இங்கு கருத்து தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவ தினம் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் கட்சியின் தலைவர் நீக்கியுள்ளார்.
இதற்கமைவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண வகித்த பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் அண்மையில் (30) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது இப்பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த நீக்கம் கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரான தன்னிச்சையான நடவடிக்கை என்று பதவி நீக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மூன்று உறுப்பினர்களையும் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, செயற்குழு போன்றவற்றின் அங்கீகாரம் இதற்காக பெறப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பதவி நீக்கம் ஒரு தன்னிச்சையான செயல். இக்கூட்டம் நடைபெற்ற போது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் பஸ்ஸில் அழைக்கப்பட்டமையும் கூட பிரச்சினைக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டத்தில் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாது. இது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களும் இன்று நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளனர். மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுக்களிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.