Friday, June 21, 2024
Home » பேரீச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சவூதி அரேபியா முதலிடம்

பேரீச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சவூதி அரேபியா முதலிடம்

by damith
April 1, 2024 10:07 am 0 comment

சவூதி அரேபியா பேரீச்சம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதாக உலக வர்த்தக நிலைய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 111 நாடுகளுக்கு, 300 க்கும் மேற்பட்ட பேரீச்சம்பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், 579 மில்லியன் ரியால்களுக்கு அதிகமான மதிப்புள்ள, 1.6 மில்லியன் டொன்களை உற்பத்தி ஏற்றுமதி செய்து சவூதி அரேபியா உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது.

பொது முதலீட்டு நிதியத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் நிர்வாக நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனைத் துறையின் தலைவர் மாஜித் அல் அசாஃப் கூறுகையில்: “பேரீச்சம்பழங்களை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் மிக முக்கியமான நாடுகளில் சவூதி அரேபியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அதன் உற்பத்திகள் உயர் தரமானவையாகும். அவற்றை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமானதாகும். சவூதி அரேபியா தனது 2030 எனும் இலக்கை அடைய இத்துறை மிகப் பிரதானமான துறைகளில் ஒன்றாக நோக்கப்படுகிறது.

சவூதி 34 மில்லியன் பேரீத்தம் மரங்களை பராமரித்து வருகிறது, அல்கஸீம் பிரதேசத்தில் மாத்திரம் 11 மில்லியனுக்கும் அதிகமான பேரீத்தம் மரங்கள் உள்ளன.

பாரம்பரிய பயிர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில் மதீனா முனவ்வராவில் “அஜ்வா” வகை பேரீச்சம் பழங்களின் தரம் மற்றும் உற்பத்தி – பொது முதலீட்டு நிதி நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் – கணிசமாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மதீனா பாரம்பரிய நிறுவனத்தை” நிறுவுவதன் மூலம், மதீனா பிராந்தியத்தில் பேரீச்சம்பழ உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதிலும், அஜ்வா பேரீச்சம்பழங்களின் உற்பத்தித் திறனை உயர்த்துவதிலும் அதிக கவனம் செலுத்தும். இது உணவு மற்றும் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்புச் செய்வதுடன் உள்ளூர் உற்பத்தியின் அளவை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மதீனா பாரம்பரிய நிறுவனம், அஜ்வா பேரீச்சம்பழ உற்பத்திகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டாலும், பிற பேரீச்சம்பழ வகைகளிலும் கவனம் செலுத்தும்.

அத்துடன் பேரீச்சம்பழ உற்பத்திகளுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக. இந்நிறுவனம் அறிவியல் நிபுணத்துவம் மற்றும் சிறந்த நவீன விவசாய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலையான விவசாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பை வழங்கும்.

“மதீனா பாரம்பரிய நிறுவனத்தை” நிறுவுதல் என்பது சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தின் மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றான விவசாயம் மற்றும் உணவுத் துறையை பலப்படுத்தும்.

இது தேசிய முதலீடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்தல் எனும் சவூதியின் 2030 இலக்குகளை அடைவதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்குமான மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக இருக்குமென

சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் தெரிவிக்கின்றது.

2022 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் பேரீத்தம்பழ ஏற்றுமதியின் மதிப்பு 14% விகிதத்தால் அதிகரித்து, 1.462 பில்லியன் ரியால்கள் இலாபத்தை ஈட்டியுள்ளது என பேரீத்தம் மரம் மற்றும் பேரிச்சம்பழங்களுக்கான தேசிய மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சவூதி பேரீத்தம்பழங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை சுமார் 119 நாடுகளாக அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியா பேரீத்தம் பழம் தொடர்பான புள்ளிவிபரங்கள்:

  • 31,234,153 பேரீத்தம் மரங்கள்.
  • 300 க்கும் மேற்பட்ட வகைகள்.
  • ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் எண்ணிக்கை 111 ஆகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,539,755 டொன்கள்.
  • ஏற்றுமதி 215,343,005 கிலோ பேரீத்தம் பழங்கள்.
  • உருமாற்றம் செய்யப்பட்ட பேரீத்தம்பழ தயாரிப்பு ஏற்றுமதி 46,970,933 கிலோ.
  • பேரீத்தம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் அரச அங்கீகாரம் பெற்ற நிருவாகிகள் 11 ஆகும்.
  • பேரீத்தம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சேவை மையங்கள் 6.

இங்கு குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம் யாதெனில் ஒவ்வொரு வருட ரமழானிலும் பல்வேறுபட்ட நாடுகளுக்கு சவூதி அரேபியா நூற்றுக்கணக்கான டொன் பேரீத்தம்பழங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றது. அந்த வகையில் எமது நாட்டு முஸ்லிம் மக்களின் ரமழான் மாத பேரீத்தம்பழ தேவையினை நிறைவேற்றும் வகையில் சுமார் 50 டொன் பழங்களை நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்ககாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT