கே: மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. அதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில் :– இது தேர்தலை இலக்காகக் கொண்ட பிரச்சார நடவடிக்கையாகும். ஆளும் கட்சியும் அதனோடு இணைந்துள்ள மலையக அரசியல் தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தற்போது அதிகம் பேசி வருகின்றன.
ஆனால் தோட்டத்தொழிலாளர்கள் வரலாற்று காலம் முதல் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதில் பலர் உயிர் தியாகமும் செய்துள்ளனர். 1984களில் சமசம்பள போராட்டம், 2011 இல் சம்பள போராட்டம், 2021 இல் சம்பள போராட்டம் என்பன முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தற்போது கிடைக்கின்ற ரூ 1000 விடவும் அதிகரித்த நாட் சம்பளத்தைத் தொழிலாளர்கள் கோருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. என்றாலும் எதிர்வரும் தேர்தலில் மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு தான் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை பேசுபொருளாக்கியுள்ளனர் என நான் கருதுகின்றேன்.
கே: ஆனால் கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனவே?
பதில் :– பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்கள் விடயத்தில் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை நான் மறைக்க முற்படவில்லை. என்றாலும், தங்களுடைய பரம்பரை பரம்பரை அரசியலுக்காக தோட்டத்தொழிலாளர்களுடைய உரிமைகளை வென்றேடுப்பதை விட சலுகைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
கூட்டு ஒப்பந்தம், தொழிலாளர் சம்பளம் என்பவற்றை விரிவாக நோக்குவது அவசியம். தொழிலாளர்களின் நாட்சம்பளம், குறைந்தபட்ச சம்பள கட்டளை சட்டத்தின் கீழ் சம்பள நிர்ணய சபையினால் நிர்ணயம் செய்யப்படும் முறையாகும். இது 1992ல் கூட்டு உடன்படிக்கையின் பின் வலுவிழந்தது. கூட்டு ஒப்பந்தமானது தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்றது. 1992ல் கூட்டு ஒப்பந்த முறை அறிமுகத்துடன் அரச பிரதிநிதிகளின் ஈடுபாடு முடிவுக்கு வந்தது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தினால் போதிய பயன்களை கொண்டு வர முடியவில்லை. 2016ல் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு அடிப்படை சம்பளமாக ரூ 800.00ஐ கோரியுள்ளனர். எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கமைய, தோட்ட தொழிலாளரின் நாட்சம்பளமாக ரூ 500.00 வும், வரவு ஊக்குவிப்பாக ரூ 60.00வும், விலை ஊக்குவிப்பாக ரூ 30.00வும், (தேயிலை மற்றும் இறப்பர் விலையை பொறுத்து) உற்பத்தி ஊக்குவிப்பாக ரூ 140.00வும் சேர்த்து மொத்தமாக ரூபா 730.00 நிர்ணயிக்கப்பட்டது. ஒரு தொழிலாளர் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்களில் 75 வீதமான வரவை பதிவு செய்தால் மட்டுமே நாளாந்த மொத்த சம்பளமான ரூ 730.00 ஐ பெறலாம் என அக்கூட்டு ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
மேலும் இக்கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தரப்பினரே பங்குபற்றி வருகின்றனர். மாற்று கருத்து கொண்ட இடதுசாரி தொழிற்சங்கங்களோ அல்லது நடுநிலையான தொழிற்சங்கங்களோ பங்குபற்றாமை இக்கூட்டு உடன்படிக்கையை கேள்விக்குறியாக்கி வந்துள்ளது.
கே: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை குறித்து உங்களது கருத்து என்ன?
பதில் :- தற்போது கிடைக்கின்ற ரூ 1000 சம்பளமானது, 2021 மார்ச் மாதத்திற்கு பின்பு கிடைக்கப்பெறுகிறது. இது கொவிட் காலக்கட்டத்திலே கிடைக்கப்பெற்றதாகும். கடந்த 2022ல் இந்நாடு பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடிக்கு உள்ளானதோடு அரசியல் பிரச்சினையையும் எதிர்கொண்டது. அதனால் வாழ்க்கை செலவு மிக வேகமாக அதிகரித்தது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இப்பின்னணியில் தான் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச வேண்டும். அதனால் ரூ 1700 என்பது எவ்வாறு கணிக்கப்பட்டது என்பது புதிராகவே உள்ளது. எந்த தொழிற்சங்கம் அல்லது எந்த தொழிலாளர் குழு ரூ 1700 என்ற மதிப்பீட்டை செய்தார்கள் என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. இது குறித்து தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்திருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். இறுதியில் இச்சம்பளத்தை கூட தங்களால் மட்டும் தான் பெற்றுக்கொடுக்க முடியும் என்று சில மலையக தொழிற்சங்க, அரசியல் கட்சிகள் குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கே: தற்போதைய பொருளாதார சூழலில் தோட்டத் தொழிலாளர்களுக்காக நீங்கள் எதிர்பார்க்கும் நியாயமான நாட்சம்பளம் எத்தகையது?
பதில் :- பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு வழு சேர்ந்து வருகின்றனர். கொவிட் காலத்தில் முழு நாடும் முடங்கி இருந்தபோது தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். பொருளாதார நெருக்கடிக் காலத்தில் கூட இந்நாட்டிற்கு அந்நிய செலவாணி அல்லது டொலரை தேயிலை, இறப்பர் ஏற்றுமதி மூலம் கொண்டு வந்தனர்.
எனவே இம்மக்கள் என்றும் இந்நாட்டிற்கு சுமையாக இருந்ததில்லை. இவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்ப்பவர்களாவர்.
அரசு மற்றும் ஏனைய துறைகளில் சமயாசமய அடிப்படையில் தொழில் புரியும் தொழிலாளர்களின் நாட்சம்பளம் ரூ 1500.00 லிருந்து ரூபா 2000.00 வரை காணப்படுகிறது. உதாரணமாக கட்டிட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட்சம்பளம் ரூ 2500.00 ஆக உள்ள அதே வேளை, அநேகமாக தனியார் துறைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களின் நாட்சம்பளம் ரூ 1500.00 முதல் ரூ 2000.00 வரையிலானதாக உள்ளது. அதனால் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் தனிநபரின் மாதாந்த வாழ்க்கைச் செலவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தது ரூ 2000 – ரூ 2500 இடைப்பட்டதாக நாட்சம்பளம் வழங்கப்படுவது அவசியம்.
ேநர் காணல்: இக்பால் அலி