இலங்கையின் கல்வி துறை சீரமைக்கப்பட வேண்டும். அது நவீன யுகத்திற்கு ஏற்ற கல்வித் துறையாக மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளும் வலியுறுத்தல்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கல்வியில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள், அபிவிருத்தியின் ஊடாகவே நாட்டிலும் சமூகத்திலும் மறுமலர்ச்சியும் அபிவிருத்தியும் ஏற்படக் கூடியதாக இருக்கும்.
குறிப்பாக நாடொன்றின் அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி முன்னேற்றம் இன்றியமையாததாகும்.
இந்தப் பின்புலத்தில் கல்வி முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்துள்ள அனைத்து தரப்பினரும் நவீன யுகத்திற்கு ஏற்ப கல்வியில் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நவீன யுகத்திற்கு ஏற்ற முறையில் கல்வியை சீரமைத்து முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கும் நாடுகளும் பிராந்தியங்களும் தான் பொருளாதார முன்னேற்றங்களில் முன்னணியில் உள்ளன.
இந்நாடு சுதந்திரமடைந்த போது பொருளாதார ரீதியில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இலங்கை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இலங்கைக்கு கீழ் மட்டத்தில் இருந்த பல நாடுகள் பொருளாதார ரீதியில் தற்போது இலங்கையை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்து விட்டன. அதற்கு அந்தந்த நாடுகள் கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் பாரிய பங்களி்ப்புக்களை நல்கியுள்ளன.
ஆனால் இந்நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்தும் இன்னும் வளர்முக, மூன்றாம் மண்டல நாடாக உள்ளது. இந் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கும் முகம் கொடுத்தது. அந்த நெருக்கடியில் இருந்து கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சி பாதையில் நாடு பிரவேசித்துள்ள போதிலும் நவீன யுகத்திற்கு ஏற்ப ஏற்கனவே கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்காது என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. அதேநேரம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வித்துறையின் மேம்பாடு இன்றியமையாதது என்ற கருத்தும் பலமாகக் காணப்படுகிறது.
இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவும் கல்வி சீர்திருத்தத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். நவீன யுகத்திற்கு ஏற்ப கல்வி முறையில் துரித சீர்திருத்தங்களைச் செய்வதில் அவர்கள் அக்கரையுடன் செயற்படுகின்றனர். நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்திற்கு கல்வித்துறை சீர்த்திருத்தங்கள் மிகவும் அவசியமானது. அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இலவசக் கல்விக் கொள்கையை முன்னெடுக்கும் இந்நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
தற்பாது நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. அவற்றில் முதலாம் தரம் முதல் உயர் தரம் வரை 42 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் 2 இலட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அனைத்து ஆசிரியர்களையும் 2033 ஆம் ஆண்டுக்குள் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றப்படவிருக்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது கல்வி பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜுன் மாதம் ஆரம்பித்து வைக்கப்படவிருகின்றது. இப்பல்கலைக்கழகம் பாராளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டதும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் தலைமையகம் மஹரகமவில் அமைக்கப்படவிருக்கின்ற போதிலும் தற்போது நாட்டில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும் இப்பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக தொழிற்படவிருக்கிறது.
இலங்கையின் முதலாவது கல்விப் பல்கலைக்கழகமாக விளங்கும் இப்பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பம், கல்வி, விஷேட கல்வி, தகவல் தொழில்நுடபம், உடற்கல்வி உள்ளிட்ட 08 பீடங்களைக் கொண்டதாக இயங்கும். ஒவ்வொரு பீடங்களும் ஆய்வுத் துறைகளைக் கொண்டதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம் இப்பல்கலைக்கழகத்தின் கட்டட தேவைகளுக்காக தற்போதுள்ள கட்டடிடங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் நிமித்தம் ஒரு பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆகவே இலங்கையின் துரித பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் முன்னெடுக்கப்படும் இப்பல்கலைக்கழகத்திட்டம்இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பின்புலமாக அமையும். இதில் மாற்றுக்கருத்துக் இடமில்லை என்பது தான் புத்திஜீவிகளின் கருத்தாகும்.