Saturday, May 25, 2024
Home » காசாவுக்கான உதவிகளை அனுமதிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

காசாவுக்கான உதவிகளை அனுமதிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

by sachintha
March 30, 2024 12:34 pm 0 comment

காசாவில் ஆறு மாதங்களாக நீடிக்கும் போரினால் அங்கு ஏற்கனவே பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் நெருங்கியுள்ள சூழலில் காசா மக்களுக்கு மேலும் உணவு மற்றும் அவசர மனிதாபிமான உதவிகள் செல்வதை உறுதி செய்யும்படி சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து, பட்டினி அளவு அதிகரித்துள்ள நிலையில் அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலிலேயே சர்வதேச நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
‘காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் தொடர்ந்து பஞ்ச அச்சுறுத்தலை எதிர்கொள்வது மாத்திரம் அன்று அதனை அனுபவிக்கின்றனர்’ என்று ஹேகை தளமாகக் கொண்ட ஐ.நா நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
‘எந்த தாமதமும் இன்றி அவசர தேவையாக உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் செல்வதை உறுதி செய்வதற்கு தேவையான பயனுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்று அந்த நீதிமன்றம் இஸ்ரேலை கூறியது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து காசாவுக்கான உணவு, நீர் மற்றும் மருந்துகளை முடக்கி முழுமையான முற்றுகையை இஸ்ரேல் அமுல்படுத்தியது. பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களுக்கு மத்திரம் அனுமதி அளிக்கப்பட்டது.
அவ்வப்போது உதவி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டபோதும் அது போதுமானதாக இல்லை என்று மனிதாபிமானக் குழுக்கள் கூறுகின்றன. இஸ்ரேலின் இந்தக் கட்டுப்பாடு போரின் ஆயுதம் ஒன்றாக பட்டினியை பயன்படுத்துவதாக உள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத்தில் வானில் இருந்து வீசப்பட்ட உதவிகள் கடலில் விழுந்ததை அடுத்து அதனை பெற முயன்ற பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தது மற்றும் மேலும் பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் அங்குள்ள மோசமான நிலையை காட்டுவதாக உள்ளன.
‘உலகில் வேறு எங்கும் இவ்வளவு மக்கள் உடனடி பஞ்சத்தை எதிர்கொள்ளவில்லை’ என்று உலக உணவுத் திட்டத்தின் பலஸ்தீன பணிப்பாளர் மத்தியு ஹொலிங்வேர்த் தெரிவித்துள்ளார்.
காசாவில் சுத்தமான நீருக்கும் கடும் பற்றாக்குறை நீடிப்பதோடு மக்கள் நீரை பெறும் முயற்சியாக நீண்ட தூரம் பயணித்து வருகிறார்கள். ‘எல்லாவற்றுக்கும் நாம் வரிசையில் காத்திருக்கிறோம்’ என்று மரம் அபூ அம்ரா என்பவர் குறிப்பிட்டார். ‘மொத்தம் ஒரு மணி நேரம் அளவுக்கு நாம் நடக்கிறோம். சில நேரங்களில், நீரின்றி வெறுங்கைகளுடன் திரும்புகிறோம்’ என்றும் அவர் தெரித்தார்.
உயிரிழப்பு 32,623 ஆக உயர்வு
காசாவில் உடனடி போர் நிறுத்தம் ஒன்றுக்கு பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியபோதும் அங்கு தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு இஸ்ரேலின் தாக்குதல்கள் அதே தீவிரத்தில் உள்ளன.
தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஹாவி அல் நாசிர் பகுதியில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
வடக்கின் அல் ஜபலியாவில் உள்ள சாத் பின் அபி வக்காஸ் பள்ளிவாசல் மீது இஸ்ரேலிய போர் விமானம் நடத்திய குண்டு வீச்சில் ஒரு பெண் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
காசா நகரின் கிழக்காக அமைந்திருக்கும் அல் ஷுஜையா விளையாட்டு கழக வளவை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக வபா குறிப்பிட்டது.
இந்தப் போர் காசாவில் பெரும்பகுதியை கட்டட இடிபாடுகளாக மாற்றி இருப்பதோடு அங்குள்ள சுகாதார கட்டமைப்பு செயலிழந்துள்ளது. காசாவின் மூன்று பிரதான மருத்துவமனைகள் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் முற்றுகை நீடித்து வருவதோடு அங்கு பலஸ்தீன போராளிகள் மறைந்திருப்பதாக இஸ்ரேல் சுமத்தும் குற்றச்சாட்டை அந்தப் போராளிகள் மறுத்து வருகின்றனர்.
தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் இருக்கும் அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் சுற்றிவளைப்புகளை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று அந்த நகரில் இருக்கும் மற்றொரு மருத்துவமனையான நாசிர் மருத்துவமனையை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் சுற்றிவளைத்துள்ளன. எனினும் அங்கு இன்னும் முழு அளவிலான சுற்றிவளைப்பு ஒன்று இடம்பெறவில்லை என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மறுபுறம் காசா நகரில் இருக்கும் அல் ஷிபா மருத்துவமனையில் கடும் மோதல் நீடித்து வருகிறது. கடந்த வார ஆரம்பம் தொடக்கம் இங்கு சுமார் 200 போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியபோதும் மருத்துவமனையைச் சூழவிருக்கும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அல் ரிமால் பகுதியில் உள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகள் அனைத்திலும் இஸ்ரேலிய ஊடுருவல் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து தப்பி வந்ததாக 63 வயது அபெத் ரத்வான் குறிப்பிட்டார். இதன்போது பலரும் கைது செய்யப்பட்டதோடு எஞ்சியவர்கள் தெற்கை நோக்கி வளியேற ஆரம்பித்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நான் அவர்களுடன் நடந்தேன். வீதிகளில் அழுகிய உடல்கள் சிதறி இருப்பதை நான் கண்டதோடு பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. அவர்கள் எதனையும் மிச்சம் வைக்கவில்லை அனைத்தையும் அழித்துவிட்டார்கள்’ என்று ரத்வான் கூறினார். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்தி தாக்குதல்களில் 71 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 112 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுமார் கடந்த ஆறு மாதமாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,623 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 75,092 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT