இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டொக்ராம், சஹூர் அஹமது சவுதுரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 328 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி இந்தப் போட்டியை சமநிலை செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். எனினும் முதல் டெஸ்டில் பந்துவீச்சில் சோபித்த கசுன் ராஜித்த முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்காதது பெரும் பின்னடைவாகும்.
ராஜித்தவுக்கு பதில் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி முதல் டெஸ்டில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய நிலையில் வேகப்பந்துக்கு சாதகமான அந்த ஆடு களத்தில் பங்களாதேஷ் அணியில் 20 விக்கெட்டுகளையும் அந்த மூன்று வீரர்களும் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் போட்டியிலும் ஆடுகளம் ஒத்துழைத்தால் அதே உத்தியை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அசித்த அணிக்கு அழைக்கப்படலாம்.
துடுப்பாட்டத்தில் முதல் டெஸ்டில் அனுபவ வீரர்கள் கைகொடுக்காத சூழலில் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவருமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சோபித்தனர். இந்நிலையில், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகிய அனுபவ வீரர்கள் தமது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினால் இலங்கைக்கு மேலும் பலம் சேர்க்கும்.
மறுபுறம் முதல் டெஸ்டில் பங்களாதேஷ் அணி அனைத்து துறையிலும் தடுமாற்றம் கண்ட நிலையில் இரண்டாவது டெஸ்டுக்கு அனுபவ சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் அழைக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
எனினும் கண்ணில் பிரச்சினை காரணமாக முன்னர் நடந்த டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறாத நிலையிலேயே அவர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மற்றது அவர் அண்மைக் காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாமல் இருந்து வந்தார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் மிர்பூரில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே பங்கேற்றிருந்தார். முதல் தர கிரிக்கெட்டிலும் அவர் நீண்ட கிரிக்கெட்டில் அண்மைக் காலமாக ஆடியதில்லை.
‘எம்மால் வெற்றிபெற முடியும் என்று எப்போதும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் எப்போது டெஸ்டில் தடுமாற்றம் காண்கிறோம், எமக்கு அது கடினமானது. ஆனால் இலங்கைக்கு எதிராக நாம் சிறந்த முறையில் ஆட வேண்டும் என்று நான் நம்புவதோடு அவர்களுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும்’ என்று பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் இணைவதற்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தபோது ஷகீப் குறிப்பிட்டிருந்தார்.
சட்டொக்ராம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஒன்று நடைபெறுவது 2022 ஆம் ஆண்டுக்குப் பின் இது முதல் முறையாகும். இங்கு மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருப்பதோடு பங்களாதேஷ் இங்கு கடைசியாக வெற்றி பெற்றது 2018 இல் ஆகும்.
ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்தபோதும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். கடந்த ஐந்து போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸின் சராசரி ஓட்டம் 381 என்பது குறிப்பிடத்தக்கது.