இந்திய காங்கிரஸ் கட்சி வருமான வரி மற்றும் அபராதம் என மொத்தம் 1,700 கோடி ரூபா செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்தல் அனுப்பி உள்ளனர்.
வருமான வரித்துறை அறிவித்தல்களை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. அந்த மனு தள்ளுபடி செய்த மறுநாளே காங்கிரஸுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து 1,700 கோடி ரூபா அறிவித்தல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2017-18 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் அபராதம் ஆக இந்த 1,700 கோடியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்தல் அனுப்பி இருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம்தான் வருமானவரித் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி ரூபா 200 கோடி அபராதம் விதித்து இருந்தது. காங்கிரஸ் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அவர்களின் கணக்குகளை முடக்கியது. இந்தச் சூழலில்தான் இப்போது ரூ.1700 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்த உத்தரவு வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையின் இந்த உத்தரவு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.