காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் பெறாத நாடுகளால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மான 15 அங்கத்துவ நாடுகளில் 14 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதுவரை போர் நிறுத்தம் ஒன்றுக்கான நகல் தீர்மானங்கள் மீது தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வந்த அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை (25) நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்டது.
இதனை அடுத்து காசா போரை ஒட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான முறுகல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்தப் பயணத்தை அதிரடியாக ரத்துச் செய்துள்ளார்.
அமெரிக்கா தனது கொள்கையை கைவிட்டிருப்பதாக நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அமெரிக்கா போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் மூன்று தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. மேலும் இரு தீர்மானங்கள் மீது ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தின.
இந்நிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில் ரமழானில் எஞ்சிய இரண்டு வாரங்களிலும் உடன் போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்தவும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘இன்றைய தீர்மானத்தின் மூலம் எமது பணயக்கைதிகளை விடுவிக்காது போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்படும் என்று ஹமாஸ் நம்புகிறது. அது போர் முயற்சி மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி இரண்டுக்கும் பாதகமாக அமையும்’ என்று நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் பின்னணியில் இந்த வாரத்தில் இடம்பெறவிருந்த இஸ்ரேலிய தூதுக்குழுவின் அமெரிக்க விஜயம் இடம்பெறாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தூதுக்குழுவின் அமெரிக்க விஜயத்தில் காசாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் படை நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.
ரபா மீதான படை நடவடிக்கை அதிக பொதுமக்களை பலிகொள்ளும் என்றும் ஹமாஸை தோற்கடிப்பதற்கான வழி அதுவல்ல என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் பகிரங்கமாக கூறியிருந்தார்.
உயிரிழப்பு 32,414 ஆக உயர்வு
எனினும் இவ்வாறான படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகும் வகையில் ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் உக்கிரம் அடைந்துள்ளன. ரபாவில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த திங்கட்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் ஒன்பது சிறுவர்கள் அடங்குவதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு ரபாவின் நாசிர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய சரமாரி செல் வீச்சில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கான் யூனிஸ் மற்றும் காசா நகருக்கு அருகில் மருத்துவமனைகளைச் சூழ கடும் மோதல் நீடித்து வருகின்றன. இஸ்ரேலிய எல்லை நகரங்களில் ரொக்கெட் குண்டு தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கும் சைரன் ஒலிகளும் எழுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துமனைக்கு அருகில் இருக்கும் வீடு ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. இந்த மருத்துவமனையைச் சூழ ஒரு வாரத்திற்கு மேலாக மோதல் நீடித்து வருகிறது.
மறுபுறம் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நாசர் மருத்துவமனையையும் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மருத்துவ வளாகத்திற்கு நுழைவதற்கு தயாராக இஸ்ரேலிய துருப்புகள் துப்பாக்கிச் சூடு மற்றும் செல் வீச்சுகளை நடத்தி வருவதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அந்த மருத்துவமனைக்குள் இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் காசாவில் உணவு பற்றாக்குறை நீடிக்கும் சூழலில் பல நாடுகளும் அங்கு வானில் இருந்து உணவு உதவிகளை வீசி வருகின்றன. அவ்வாறு கடலில் விழுந்த உதவியை பெறும் முயற்சியில் ஏழு பலஸ்தீனர் மூழ்கி பலியாகி இருப்பதாக காசா சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
உதவிகள் கடலுக்குள் விழுந்ததை அடுத்து காசாவின் அஸ் சுதனியா கடற்கரையில் இருந்து அதனை பெறுவதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கடலுக்குள் நீந்திச் சென்றதை அடுத்தே கடந்த திங்கட்கிழமை ஏழு பேர் காணாமல்போயுள்ளனர்.
‘உதவிகளை வழங்குபவர்களுக்கு எல்லைகள் வழியாக அவற்றை ஏன் வழங்க முடியாது?’ என்று அந்த உதவியை பெறுவதற்கு கடலில் நீந்திச் சென்ற முஹமது சுபை கேள்வி எழுப்பினார். ‘எல்லை வழியாக உதவிகள் வருவது இலகுவானது மற்றும் பாதுகாப்பானது என்று அவர் அல் ஜசீராவுக்கு குறிப்பிட்டார்.
இந்த மாத ஆரம்பத்தில் வானில் இருந்து வீசப்பட்ட உதவிப் பொதிகள் தம் மேல் விழுந்த சம்பவங்களில் குறைந்தது ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது வானில் இருந்து உதவிகள் போடுவது குறித்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 93 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,414 ஆக அதிகரித்துள்ளது. தவிர 74,87 பேர் காயமடைந்துள்ளனர்.
பேச்சு தொடர்கிறது.
பாதுகாப்புச் சபையில் அவசர போர் நிறுத்தத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக கட்டாரில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இதில் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுவது மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவது உட்பட விரிவான போர் நிறுத்தம் ஒன்றுக்கான தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் ஹமாஸின் இந்த முன்மொழிவுகள் ‘யதார்த்தமற்றது’ என்று நெதன்யாகு குறிப்பிடுகிறார்.
எனினும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாக கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். ‘முதல் நாளில் இருந்து நாம் சாதகமான சூழலுடன் உற்சாகமாக உள்ளோம்’ என்று செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்ட அவர் இந்தப் பேச்சுவார்த்தையில் காலவரை ஒன்று இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘எமது மத்தியஸ்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அனைத்து பிராந்திய மற்றும் சர்வதேச தரப்புகளுடன் நாம் ஒத்துழைப்புடன் செயற்படுகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் காசா போர் சூழல் மற்றும் பேச்சுவார்த்தை மேடையில் இதுவரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை மீறும் பட்சத்தில் தடைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க முடியும் என்றபோதும் இந்தத் தீர்மானம் கடப்பாடுடையதல்ல என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
‘இந்த கடப்பாடற்ற தீர்மானத்தின் சில முக்கிய நோக்கங்களுக்கு’ அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் கிரீன்பீல் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லிரும் ‘இது கடப்பாடற்றது’ என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் பாதுகாப்புச் சபை தீர்மானம் கடப்பாடுடையது என்று ஐ.நாவுக்கான சீன தூதுவர் சங் ஜுன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இஸ்ரேல் கடந்த காலத்தில் பாதுகாப்புச் சபை தீர்மானத்தை பொருட்படுத்தாமல் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2016 டிசம்பரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக் காலத்தின் காடைசி நாட்களில், பலஸ்தீனத்தில் இடம்பெறும் இஸ்ரேலிய குடியேற்றங்கள் சட்டவிரோதமானது என்றும் அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் குறிப்பிடும் பாதுகாப்புச் சபை தீர்மானம் அமெரிக்கா வாக்களிப்பதை தவிர்த்ததன் மூலம் 14 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. எனினும் அந்தத் தீர்மானம் இஸ்ரேலால் பொருட்படுத்தப்படவில்லை.