மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் எம்.எம். ஜவாத் அந்த வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய கோட்டங்களில் 78 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன.
பாடசாலைத் தரிசிப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஏறாவூர் கோட்டத்திலுள்ள 18 பாடசாலைகளுக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர் ஜவாத் விஜயம் செய்து அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். பாடசாலைகளின் குறைநிறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஜே. றிப்கா மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் முகமட் நியாஸ் ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.
காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையிலான காலப்பகுதியில் 18 பாடசாலைகளுக்கு சென்று பார்வையிட்டார். புதிய பணிப்பாளரின் இவ்விஜயம் ஆக்கபூர்வமாக அமைந்ததுடன் முன்மாதிரியானதாகவும் இருந்ததாக பாடசாலை அதிபர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாதத்தில் புனித நோன்பிற்காக விடுமுறையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் நிருபர்