Saturday, November 2, 2024
Home » தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று மருத்துவமனை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று மருத்துவமனை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

- கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது

by Rizwan Segu Mohideen
March 27, 2024 5:28 pm 0 comment
  • இந்த ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போதிய மூலதனச் செலவுகள் வழங்கப்படவில்லை எனவும் இந்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக மூலதனச் செலவுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை”யை மக்களின் பாவனைக்காக இன்று (27) காலை திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஆறு மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை 640 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், விசேட குழந்தை பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் பிரிவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து, ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்மட் கோல், சுனாமி அனர்த்தத்தினால் தென் மாகாணத்தில் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி மகமோதர வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்த்துவிட்டு புதிய மகப்பேற்று வைத்தியசாலையை அமைக்க முன்வந்தார்.

வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஜெர்மன்அரசாங்கம் 25 மில்லியன் யூரோக்களை ( சுமார் 357 கோடி ரூபாய்) வழங்கியிருந்தது. வைத்தியசாலைக்கான செலவுகளில் ஒரு பகுதி நன்கொடையாகவும், மற்றைய பகுதி இலகுக் கடனாகவும் கிடைத்துள்ளது.

ஜேர்மன் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைக்காக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கு (Felix Neumann) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார்.

வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஆரம்பத்தில் 800 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு காணிகள் கையகப்படுத்தப்பட்டு தற்போது வைத்தியசாலையின் மொத்த பரப்பளவு சுமார் ஆயிரம் பேர்சஸ்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

புதிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்ததன் பின்னர், நவீன சத்திர சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”முன்னர், நமது மருத்துவர்களுக்கு மலேரியாவுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. ஆனால் தற்போது முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், பல்வேறு நோய்கள் ஏற்படுவதாலும் சுகாதாரத் துறையின் சவால்கள் அதிகரித்துள்ளன. எனவே, சுகாதார சேவை அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.

மேலும், இந்த நாட்டில் கல்வி முறையும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். இதுவரை, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மூலதனச் செலவு குறைவாகவே ஒதுக்கப்பட்டது. முன்னர் சுகாதாரம் மற்றும் கல்விக்கு போதுமான பணம் செலவிடப்படவில்லை. யுத்தத்திற்கு பெருமளவு பணம் ஒதுக்க வேண்டியேற்பட்டதே அதற்குக் காரணம்.

இரண்டாவதாக, அதிக அளவு கடன் வாங்கியிருப்பதால், அதிக பணத்தை வட்டியாகச் செலுத்த நேரிட்டுள்ளது. 1980 – 1989 களில் நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன். ஆனால் பின்னர் பல்வேறு காரணங்களால் கல்விக்காக அதிக பணம் செலவிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நாம் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் அதிக அளவில் கடன் வாங்க நேரிட்டதால், எங்கள் வருமானத்தில் 50% கடன் மற்றும் வட்டிக்காகச் செலவிடப்படுகிறது. இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 07 டிரில்லியனுக்கும் மேல் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 3.9 டிரில்லியன் கடனை திருப்பிச் செலுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு கடனைத் திருப்பி செலுத்தவும், மூன்றில் இரண்டு பங்கு வட்டியைச் செலுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.2 டிரில்லியன் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. மூலதனச் செலவுகளை ஒதுக்கிய பின்னர், மிகக் குறைவான தொகையே எஞ்சுகிறது. நீர்ப்பாசனம் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை உடனடியாக மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு எங்களுக்குத் தெரிவித்தன. இந்த ஆண்டுக்கான செலவினங்களுக்குத் தேவையான பணத்தை நாட்டிற்குள் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் முதல் முடிவாகும். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் இது முக்கியமான முடிவாகும். எக்காரணத்திற்காகவும் இனி பணம் அச்சிட முடியாது. மேலும், அரசு வங்கிகளில் பணம் பெற முடியாது. நாட்டிற்குள் இருந்து தேவையான வருமானத்தை ஈட்டிக்கொண்டு, முன்னேற வேண்டும்.

இதில் எமக்கிருந்த ஒரே வழி வரியை உயர்த்துவதுதான்.இதற்காக அனைவரும் எங்களைக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இந்த நடவடிக்கையால், முதல் முறையாக வரவு செலவுத்திட்டத்திற்காக பணத்தை அச்சிட வேண்டிய தேவை ஏற்படவில்லை. அனைவரும் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் அறிவோம். ஆனால் வரி அதிகரிப்பால் இன்று வரவு செலவுத் திட்டத்திற்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. அதன் பெறுபேறுகளை இன்று நாட்டில் காணமுடிகிறது. டொலருக்கு நிகராக 370 ரூபாவாக இருந்த ரூபாயின் பெறுமதி, தற்போது 300இற்கும் குறைவாக சரிந்து, ரூபா வலுப்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் மேலும் ரூபா வலுவடையும்.

மேலும் பணவீக்கம் குறைவதால் வட்டி வீதத்தைக் குறைக்க முடியும். அப்போது தொழிற்துறைகள் முன்னேற்றமடையும். தொழிற்துறை வளர்ச்சியால் நாடு முன்னேற்றமடையும். கஷ்டமாக இருந்தாலும், எடுத்த தீர்மானங்களினால் நாடு இன்று பலனடைந்துள்ளது. மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளோம். குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். இதனுடன் தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்தால், அடுத்த 02 வருடங்களில் நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை படிப்படியாக குறையும். அந்த பணத்தை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தலாம்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனமயப்படுத்தாமல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது. 1930களில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் நாம் முன்னேறினோம். 1980களில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் நாங்கள் முன்னேறினோம். இன்று இலங்கையில் மாத்திரமன்றி ஐக்கிய இராச்சியத்திலும் எமது மருத்துவத் துறையினரால் சுகாதார முறைமை இயங்கி வருகின்றது. எனவே, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான பணத்தை நாமே உருவாக்கி அந்த துறைகளில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததாவது;

”அதிநவீன மகப்பேற்று வைத்தியசாலையை வழங்கியதற்காக முன்னாள் ஜெர்மன் சான்சலர் ஹெல்மொட் கோலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 2010ஆம் ஆண்டு நான் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான போது எனக்கு இரண்டு கனவுகள் இருந்தன.

சுனாமியால் சேதமடைந்த காலி பிரதான பேருந்து நிலையத்தை புனரமைப்பதும், அக்காலகட்டத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜேர்மன் – இலங்கை நட்புறவு பெண்கள் வைத்தியசாலையை நிர்மாணிப்பதும் அந்த இரண்டு கனவுகள் ஆகும். காலி பிரதான பேருந்து நிலையம் 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த சமயம் ​​இந்த வைத்தியசாலைக்காக 26 அஸ்திவார தூண்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசு ஆதரவு அளித்தது. இன்று இவ் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கராபிட்டிய வைத்தியசாலைக்கு 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, பேராசிரியர் பிரிவு, பக்கவாதப் பிரிவு ஆகியவற்றுக்கு 100 கோடி ரூபாவும், மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் நூறு கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் அளவின் அடிப்படையில் கராபிட்டிய வைத்தியசாலையானது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய தினம் மகப்பேற்று வைத்தியசாலையுடன் கராபிட்டிய வைத்தியசாலையின் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படுகிறன.” என்று தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி:

”சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற நாளையும் இன்றைய நாளையும் பார்க்கும் போது நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அவரது வெளிநாட்டு உறவுகள் பெரும் உதவியாக இருந்தன. கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த ஆரம்பித்து, இன்றுடன் கடனைச் செலுத்தி முடித்துள்ளதை உதாரணமாக கூறலாம். இலங்கையின் பெருமையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால:

”இலவச சுகாதார சேவையைப் பெறும் இலங்கை மக்களுக்கு விசேட சலுகைகள் கிடைத்துள்ளன. இலங்கை மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, பெண்ணின் ஆயுட்காலம் 80 வயதாகவும், ஆணின் ஆயுட்காலம் 76 வயதாகவும் உள்ளது. நமது சுகாதார சேவையினால் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இதனை உறுதிசெய்துள்ளது. மேலும், எமது சுகாதார சேவையில் சிறந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட மருத்துவர் குழுவொன்று உள்ளது. இது இந்நாட்டின் சுகாதாரத் தரத்தின் பண்புகளைக் குறிக்கிறது. இந்தச் சேவைகள் அனைத்தும் இலங்கை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டவை என்றே கூற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தென் மாகாண ஆளுநர் விலி கமகே, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஹெல்மட் கோல் காலி மகப்பேற்று வைத்தியசாலையின் பதில் தலைவர் ஜகன் வீர்த் (Jurgen Weerth) உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x