வன்முறைக்கு அன்று வித்திட்டவர்களிடமிருந்து பாராளுமன்றம் உள்ளிட்ட அரச சொத்துக்களை பாதுகாப்பது மனித உரிமை மீறல் எனச் சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்.இருந்தபோதும், அந்த நடவடிக்கையை அன்று எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியிருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடும் நோக்குடன் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமரின்
செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரீட்சை சுமையை குறைத்து பாடசாலை கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழக கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றத்தின் கீழ் அந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவு தேவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர் தரத்திலான கல்வி முறையை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பில் நல்லதொரு சூழல் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழக நிர்வாகத்தை வெளித் தரப்பினருக்கு வழங்குவதா அல்லது மாற்றங்களை மேற்கொண்டு பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிய சூழலை உருவாக்க வேண்டுமா என்பதை பல்கலைக்கழகங்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் களனி பல்கலைக்கழக திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற தான் தவறவில்லை என்பதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல சீர்திருத்தங்கள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருத்துரைத்ததோடு, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய புத்திஜீவிகளால் அறிவை உருவாக்குதல், அந்த அறிவைப் பகிர்ந்தளித்தல், நாட்டின் தேசிய தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற சேவைகள் நிறைவேற்றப்படுவதாக இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக கட்டமைப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து பிரித்து சுயாதீன கல்வி நிறுவனங்களாக மாற்றுதல், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மாணவர்களுக்கு இன்றைய மாணவர்களின் தேவைக்கேற்ப தனித்துவமான தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கற்கைநெறிகளை கற்க வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் அதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் தேவையான சூழலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைத்து பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும் நிறுவனங்களாக மாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் கீழே தரப்படுகின்றன.
கேள்வி: உலகின் பல நாடுகளில் தொழில் முனைவோர் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நமது நாட்டிலும் தொழில் முனைவோர் கல்வியை கட்டாயமாக்க பரிந்துரைக்கிறோம்.
பதில்: பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர் களுக்கும் இங்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.
கேள்வி: பல்கலைக்கழகக் கல்வியை முறைமைப்படுத்துவதற்கு, நாட்டின் சட்டங்கள் பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
பதில்: அதை அரசாங்கத்தால் மாத்திரம் தனியாக செய்ய முடியாது. அது அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணி. ஆனால் மற்றவர்கள் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. 1980 களில் உருவாக்கப்பட்ட முறைமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. அந்த நிலைக்கு நாம் மீண்டும் செல்ல முடியாது. எனவே, புதிய நாட்டிற்கு ஏற்ற புதிய கல்வி முறையை அவசரமாக நாம் உருவாக்க வேண்டும். அதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம். ஒரு மாணவனை பல்கலைக்கழகத்தில் இணைத்து நான்கு வருடங்களில் பட்டம் பெறுவது மாத்திரமன்றி. பல்கலைக்கழகத்தில் விவாதிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கலந்துரையாடல்களை நடத்தினர். இன்று அவ்வாறான சூழல் பல்கலைக்கழகங்களில் காணப்படவில்லை. அந்த நிலையை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.