உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் தெரிவித்த கூற்று தொடர்பில் நேற்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி நேற்றுக் காலை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு நேற்று காலை 10.30 மணியளவில் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலப் பதிவையடுத்து பிற்பகல் 3.50 மணியளவிலேயே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவரிடம் சாதாரண முறைப்படி கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவர் அதற்கான பதில்களைத் தெரிவித்ததாகவும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் முன்னிலையில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மூலம் இந்த வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது முன்னாள் ஜனாதிபதியிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது கருத்து தெரிவித்துள்ள முன்னாள்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட உண்மையான குற்றவாளி தொடர்பில் முன்று வாரங்களுக்கு முன்பே தமக்கு தெரிய வந்ததா கவும் தமக்கு தகவலை வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பில் அவர்கள் தம்மிடம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் மீள பரிசீலிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கிணங்க அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்