மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களதும் சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் உறுதி செய்வதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ராஜஸ்தானைத் தளமாகக் கொண்டுள்ள தொண்டர் அமைப்பின் பிரதிநிதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாற்றுத் திறனாளிகளது உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55வது அமர்வில் மாற்றுத் திறனாளிகளது உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலின் போது சம்க்ரஹ் கல்யாண் சன்ஸ்தான் என்ற ராஜஸ்தானைத் தளமாகக் கொண்டுள்ள தொண்டர் அமைப்பின் பிரதிநிதியே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளை ஒரே தேசத்தினராக ஒன்றிணைப்பதில் பாராட்டத்தக்க முன்னேற்றங்களை இந்தியா அடைந்துள்ளது. அவர்களுக்கான உரிமைகள் சட்டத்தில் மாத்திரமல்லாமல் அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளும் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை உறுதி செய்வதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
கடந்த மூன்று தசாப்த காலமாக எமது நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயற்படுகின்றது. அவர்களது ஆற்றல்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு ஏற்ப அவர்கள் வலுவூட்டுப்படுகின்றனர். குறிப்பாக வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் நடவடிக்கை, உதவி தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் ஊடாக கல்விக்கான தடைகளை நீக்கி அனைவருக்கும் சம வாய்ப்புக்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் சிறந்த மருத்துவ சேவையையும் சுகாதார வசதிகளையும் சிரமங்களின்றி பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவென பல்வேறு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கென திறன் மேம்பாட்டு செயலமர்வுகள், ஆலோசனை வழங்கும் சேவைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் திட்டங்களும் அவற்றில் அடங்கியுள்ளன.
அதனால் உலகெங்கிலுமுள்ள மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்க வேண்டும் என்றும் அப்பிரதிநிதி இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார்.