இலங்கை 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்நெருக்கடியினால் வங்குரோத்து நிலையை அடைந்து பொருளாதார ரீதியில் அதல பாதாளத்திற்குள் தள்ளப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களினால் அந்த பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணவோ, அப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளான மக்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கவோ முடியவில்லை. அதனால் அன்றைய ஆட்சியாளர்கள் பதவிகளை விட்டு விலகினர்.
இவ்வாறான சூழலில் நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்பதற்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கவும் எவரும் நாட்டுக்கு தலைமை வழங்க முன்வராத இக்கட்டான நிலை உருவானது.
அந்தச் சூழலில் நாட்டினதும் மக்களிதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாபதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்தார். அப்பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறுகிய காலம் முதல் பலனளிக்கத் தொடங்கின. அதனால் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அசௌகரியங்களும் கட்டம் கட்டமாகக் குறைவடைந்து நீங்கலாயின.
குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருப்பது முடிவுக்கு வந்ததோடு, பொதுப்போக்குவரத்து சேவையும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மின்வெட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உல்லாசப் பயணிகள் வருகையிலும் அதிகரிப்பு ஏற்பட்டது.
ஆனால் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான மக்கள் நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு பொறுமை காத்தார்கள். அதனால் இந்நெருக்கடியில் இருந்து பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கு அமைய மக்களுக்கு சலுகைகளும் நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
அந்த வகையில் அஸ்வெசும கொடுப்பனவு, பசளை மானியம், அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு, மின்கட்டணக் குறைப்பு என்றபடி பல்வேறு நிவாரணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் எதிர்வரும் சிங்கள, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இருபது கிலோ அரிசியை இலவசமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
அந்த அடிப்படையில்தான் சிங்கள, தமிழ் புத்தாண்டின் நிமித்தம் இவ்வருடமும் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ கிராம் அரிசி இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்படவிருக்கிறது. கடந்த வருடமும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் நிமித்தம் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் 27.4 இலட்சம் குடும்பங்களுக்கு இவ்வாறு அரிசி வழங்கப்பட்டது.
இவ்வருடமும் 27 இலட்சம் குடும்பங்களுக்கு புத்தாண்டின் நிமித்தம் இலவசமாக அரிசி வழங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ள நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, இத்திட்டத்திற்கென 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றுள்ளார்.
உண்மையில் இது பாரியதொரு மக்கள் நலத்திட்டமாகும். மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதை அரசாங்கம் மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம் பால்மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூபா 150 குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டிலுள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலைகளில் கல்வி பயிலும் 16 இலட்சம் மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது. தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான பாடசாலைப் பிள்ளைகள் வழங்கப்படும் இத்திட்டத்திற்கென 1660 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் நாடு பிரவேசித்திருப்பதன் வெளிப்பாடே இவையாகும். நம்பிக்கை தரும் வகையில் பொருளாதாரம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாடு அடைந்து கொள்ளும் பொருளாதார பிரதிபலன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அந்த வகையில்தான் இவ்வாறான மக்கள்நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை அனைத்தும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்தை இலக்காகக் கொண்ட திட்டங்களே அன்றி வேறில்லை என உறுதிபடக் கூறலாம்.