Thursday, July 25, 2024
Home » நாட்டுக்குள் வந்த பழுதடைந்த 102 கொள்கலன் மீன்கள்; அம்பலமான முறைகேடுகள்

நாட்டுக்குள் வந்த பழுதடைந்த 102 கொள்கலன் மீன்கள்; அம்பலமான முறைகேடுகள்

- CID இற்கு முறையிட நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்பு

by Rizwan Segu Mohideen
March 25, 2024 4:08 pm 0 comment

– விசாரணைகளை விரைவுபடுத்த CID அதிகாரிகளுக்கு அறிவிப்பு

பழுதடைந்த மீன்கள் அடங்கிய 102 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டுவந்த சம்பவம் குற்றவியல் விடமொன்றாகத் தோன்றுவதால், அது தொடர்பில் உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அண்மையில் ஆலோசனை வழங்கியது. அத்துடன், இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

சீஷெல்ஸிலிருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த பழுதடைந்த மீன் கொள்கலன்களுடன் கூடிய கப்பல் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் கணக்காய்வு விசாரணையின் மூலம் தெரியவந்த விடயங்களை ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (20) கூடிய போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

சீஷெல்ஸிலிருந்து தாய்லாந்து நோக்கி 102 மீன் கொள்கலன்களை (2700 மெட்ரிக் தொன்னுக்கும் மேல்) ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கைக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளது. கப்பலின் மின்சாரம் தடைப்பட்டதால் மீன்கள் பழுதடைந்ததாக தெரியவந்துள்ளது. இதன்படி, 2022.01.13 ஆம் திகதி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், கப்பலின் திருத்தப்பணிகள் நிறைவடைந்த பின்னர் புறப்படுவதற்கு பதிலாக, இந்த கொள்கலன்களை இலங்கை பெற்றுக்கொண்டமையால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பி.சி. விக்ரமரத்ன இதன்போது குறிப்பிட்டார்.

அவசரநிலையின் போது கப்பலுக்கு ஏற்படும் கோளாறுகளுக்கு அருகிலுள்ள துறைமுகத்தில் சில வசதிகள் வழங்கப்படுகின்ற போதிலும் இலங்கை சுங்கச் கட்டளைச் சட்டத்தின்படி, “சேதமடைந்த துர்நாற்றம் வீசக்கூடிய, நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் நோயை உண்டாக்கும் மீன் வகைகள், தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் இறக்குமதி செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த மீன்களை தரையிறக்கிமை மிகவும் சிக்கலுக்குரியது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பழுதடைந்த மீன்களை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது சட்டத்துக்கு முரண் என்பதால், சுங்கத்தால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சுங்க அதிகாரிகளைக் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில், இந்நாட்டின் கொள்வனவாளர் ஒருவரை இறக்குமதியாளராகப் பயன்படுத்தி புதிய CUSDEC அனுமதியைப் பெற்று இந்தக் கொள்கலன்களை இலங்கையில் தரையிறக்கியுள்ளதாக இதன்போது தெரியவந்தது.

இறக்குமதி செய்யப்படாத கொள்கலன்களை இறக்குமதி எனக்காட்டி இவ்வாறு செய்வது மோசடி என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், இறக்குமதியாக வழங்கப்பட்ட விலைப்பட்டியலில் 10.12.2021 திகதி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அது கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த 13.01.2022 திகதிக்கு முந்தைய திகதி என்றும், அது சிக்கலானது எனவும் கணக்காய்வாளர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், சுங்கக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரையின் பேரில், இந்த மீன்களை இயற்கை உர உற்பத்திக்காக இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு அமைய பெற்றதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

102 கொள்கலன்களில் 4 அழிக்கப்பட்டதாகவும், எஞ்சிய 98 இல் 43 உரம் உற்பத்திக்காகவும், 40 மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், 15 இன்னும் நாட்டில் எஞ்சியுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது. 2023 ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பௌதிக பரிசோதனையின் போது, எஞ்சியுள்ள 15 கொள்கலன்களில் பழுதடைந்த மீன்கள் அதிக துர்நாற்றம் வீசுவது அவதானிக்கப்பட்டதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இயற்கை உரம் தயாரிப்பதற்காக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மீன் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதும் பிரச்சினைக்குரியது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், உரம் தயாரிப்பதற்காக இந்த மீன்களை பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் பிரதான வர்த்தகம் செமன் உற்பத்தியாக உள்ளதும் சிக்கலுக்குரியது என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். எவ்வாறாயினும், இது இரண்டு வர்த்தகங்கள் எனவும், அதனால் இந்த மீன்கள் செமன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் சாட்சியமளிப்பதாக இங்கு கலந்துகொண்ட சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலொன்று ஆபத்தில் உள்ள போது உதவி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் இங்கு நடந்திருப்பது அவ்வாறானதொன்று அல்ல என்பது தெளிவாகின்றது என குழுவின் தலைவர் தெரிவித்தார். எவரும் கொள்வனவு செய்ய விரும்பாத பழுதடைந்த மீன்களை நாட்டிற்குள் கொண்டுவருவது ஒரு பாரதூரமான நிலை என்றும், சுற்றுச்சூழலுக்கும் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த மீன்கள் மனித பாவனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும், இந்த முழு செயற்பாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக, களப் பயணம் மேற்கொண்டு, எவ்வளவு உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் கொண்ட குழு ஒன்றை நியமிக்குமாறு 23.01.2024 அன்று நடைபெற்ற கோபா குழுவில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு பரிந்துரை வழங்கியிருந்த போதிலும், இந்தக் கூட்டத்திற்கு அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே அந்தக் குழு நியமிக்கப்பட்டது என்பதும் இங்கு தெரியவந்தது. இது தொடர்பில் கோபா குழுவின் தலைவர் கடும் அதிருப்தியை தெரிவித்தார்.

மேலும், ​​சுங்க அதிகாரிகள் இலங்கைக்குள் கொள்கலன்களை கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுள்ளமை இந்த முழு செயல்முறையின் விசாரணையில் தோன்றுவதாகவும், ஏனைய நடவடிக்கைகளுக்கும் அதே ஆர்வம் இருக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டயனா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, இசுறு தொடங்கொட, (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோரும், சுற்றாடல் அமைச்சு, நிதி அமைச்சு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை சுங்கம், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கணக்காய்வாளர் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT