Monday, May 20, 2024
Home » காசா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் இஸ்ரேல் மீதான அழுத்தம் அதிகரிப்பு

காசா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் இஸ்ரேல் மீதான அழுத்தம் அதிகரிப்பு

- கட்டார் பேச்சில் தொடர்ந்து முட்டுக்கட்டை

by Rizwan Segu Mohideen
March 23, 2024 8:14 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் தனது நெருங்கி கூட்டாளியான இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது நகல் தீர்மானத்தை பாதுகாப்புச் சபையில் நேற்று வாக்கெடுப்புக்கு விட்டதோடு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேலிய உளவுப் பிரிவுத் தலைவர் நேற்று (22) மீண்டும் கட்டார் விரைந்தார்.

கெய்ரோவில் கடந்த வியாழக்கிழமை பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிலிங்கன், கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் 40 பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளை விடுவிப்பது மற்றும் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதை மையப்படுத்தியே கட்டாரில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பஞ்ச அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் காசாவுக்கு உதவிகளை அதிகரிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கட்டாரில் இடைவெளிகள் குறைந்து, உடன்பாடு ஒன்றுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். அதனை எட்டுவது தொடர்ந்து கடினமாக உள்ளது. ஆனால் அது சாத்தியமாகும் என்பது பற்றி தொடர்ந்து நம்பி வருகிறோம்’ என்று பிளிங்கன் கூறினார்.

ஆரம்பத்தில் சவூதி அரேபியா சென்ற பிளிங்கன் தொடர்ந்து எகிப்தில் இருந்து நேற்று இஸ்ரேலை சென்றடைந்தார். அங்கு அவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கவிருந்தார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே முறுகல் ஏற்பட்டிருக்கும் சூழலிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றின் ஓர் அங்கமாகவே பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் தொடர்ந்து வலியுறுத்துவதோடு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றையே இஸ்ரேல் வலியுறுத்தி வருவது இந்தப் பேச்சுவார்த்தையின் பிரதான முட்டுக்கட்டையாக உள்ளது.

ஹமாஸ் நெகிழ்வுப் போக்கை வெளிப்படுத்தியபோதும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை விரும்பாத இஸ்ரேல் தொடர்ந்து முட்டுக்கட்டையாக செயற்பட்டு வருவதாக பெயரை வெளியிடாத பலஸ்தீன அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்நிலையில் மத்தியஸ்தர்களை சந்திப்பதற்கு இஸ்ரேலிய உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னீ, நேற்று (22) கட்டார் பயணித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் இஸ்ரேலின் காவலனாக தொடர்ந்து செயற்பட்டு வரும் அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளி மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் காசாவில் போர் நிறுத்தத்தை கோரி நகல் தீர்மானம் ஒன்றை பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பித்தது. இந்தத் தீர்மானம் மீது அமெரிக்க நேரப்படி நேற்று (22) வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.

ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் போர் தொடர்பில் சர்வதேச அளவில் கண்டனங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதில் பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்கு அனுமதிக்கும் வகையில் சுமார் ஆறு வாரங்கள் நீடிக்கும்; ‘அவசர மற்றும் நிலைத்த போர் நிறுத்தம்’ ஓன்றையே அமெரிக்காவின் நகல் தீர்மானத்தில் கோரப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் காசா போர் தொடர்பில் முன்னர் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட நகல் தீர்மானங்களில் ‘போர் நிறுத்தம்’ என்ற சொற்பிரயோகத்தை எதிர்த்து வந்த அமெரிக்கா அதற்கு பல முறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இருந்தது. கடைசியாக அல்ஜீரியா கொண்டுவந்த போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தையும் தனது வீட்டோ வாக்கால் அமெரிக்க ரத்துச் செய்தது.

தொடரும் உயிரிழப்புகள்

இதேநேரம் காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையின் மீது மேலும் சில நாட்கள் தாக்குதல்களை தொடர எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. வடக்கு காசாவில் பகுதி அளவேனும் இயங்கும் இந்த மருத்துவமனை மீது இஸ்ரேலியப் படை நான்கு நாட்களுக்கு மேலாக சுற்றிவளைப்பை நடத்தி வருவதோடு டாங்கிகள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் கடந்த வியாழனன்று கூறியிருந்தனர்.

இந்த மருத்துவ வளாகத்தை ஹமாஸ் ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அதனை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருகிறது. அண்மைய நாட்களில் மருத்துவமனை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் 150 போராளிகளை கொன்றதாகவும் மேலும் 358 பேரை பிடித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

எனினும் இஸ்ரேலிய போர் விமானங்கள் மருத்துவமனையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகள் மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் தெற்கு நகரான ரபாவின் அதன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெரும் அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் ரபாவின் வடகிழக்கில் உள்ள நாசிர் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றை இலக்கு வைத்து நேற்று (22) காலை நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

கொல்லப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்கள் இருப்பதாகவும் காயமடைந்த சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று கான் யூனிஸில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை வெளியே கொண்டுவர முயன்று வருவதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 32 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT